ஒசாமா கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா!
அல்-காய்தா பயங்கரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடனை எங்களது சிறப்பு கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்றதை அமெரிக்காவில் இருந்தவாறே நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம் என அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரனென் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கையை பார்ப்பதற்கு வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் பிரத்யேகத் திரை அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், துணை அதிபர் ஜோ பிடன் உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சூழலை உற்று கவனித்துக் கொண்டிருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியது: எங்கள் நாட்டு கமாண்டோ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர்கள், பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு மேல் சென்று வட்டமிடத் தொடங்கியது முதல் வீரர்கள் வீட்டுக்குள் புகுந்து ஒசாமாவை தீர்த்துக் கட்டியது வரை பார்த்தோம். எங்கள் கமாண்டோ வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் திகிலாக இருந்தது.
நாங்கள் அனைவருமே ஆரம்பம் முதல் கடைசி வரை பதற்றத்துடன் இருந்தோம். ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது ஒருபுறம் இருந்தாலும் எங்களது வீரர்களின் பாதுகாப்பை நினைத்து கவலை அடைந்தோம். உயிரைப் பணயம் வைத்து போராடிய அவர்களின் துணிவு எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.
ஒசாமா தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து வீரர்கள் துப்பாக்கியால் சுட்டபோதெல்லாம் அதிபர் ஒபாமா அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்.
வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டார். சிறிய அறைக்குள் இருந்தாலும் ஒரு நிமிடம்கூட ஒருவரை ஒருவர் நாங்கள் பார்த்துக்கொள்ளவில்லை. அனைவரின் விழிகளும் திரையையே நோக்கின.
பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கை 40 நிமிடமே நடந்தது. இருப்பினும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு ஒரு நாள்போல் கழிந்தது. கடும் போராட்டத்துக்குப் பின்னர் ஒசாமாவின் கதையை முடித்து அவரது உடலை ஹெலிகாப்டரில் கிடத்தியதும்தான் எங்களுக்கு நிம்மதி என்றார் ஜான் பிரனென்.
ஒசாமா தாக்குதல் பாகிஸ்தானுக்கு தெரியும்?
ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பாகிஸ்தானுடன் புலனாய்வுத் தகவல்கள் ஏன் பகிரிந்து கொள்ளப்படவில்லை என்பது குறித்து சி ஐ ஏ வின் இயக்குநர் தெரிவித்துள்ள கருத்துகள் பாகிஸ்தானில் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளன.
அந்த நடவடிக்கை பற்றி, பாகிஸ்தானுடன் புலனாய்வுத் தகவல்களை பகிரிந்து கொண்டால், அது அந்த நடவடிக்கையை சீர்குலைத்துவிடும் என்கிற அச்சம் காரணமாகவே தாம் அந்நாட்டுடன் எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று, அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி ஐ ஏ வின் இயக்குநர் லியான் பனேட்டா கூறியுள்ளார்.
இப்படியான கருத்துக்கள் தங்களை மிகவும் சஞ்சலப்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சி ஐ ஏ வின் இயக்குநருக்கு தனது கருத்துக்களை தெரிவிக்க உரிமையுள்ளது என்றாலும், அமெரிக்காவுக்கு தமது நாடு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கியது என்றும் பஷீர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் உண்மை என்னவென்றால், குறிப்பிட்ட அந்த இடம் எமது புலனாய்வுத் துறையினரால் அமெரிக்க புலனாய்வுத் துறையினருக்கு சுட்டிக்காட்டப்பட்டது
உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று கூறப்படுவது தொடர்பிலான வெற்றிகளுக்கு பாகிஸ்தான் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐ எஸ் ஐ அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அசாத் துரானி, இந்தத் தாக்குதல் நடவடிக்கை பாகிஸ்தானியர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும் என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லாடன் அந்த வளாகத்தில் தங்கியிருந்தார் என்பதும் இந்த ஐ எஸ் ஐ க்கு தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறும் அசாத் துரானி, பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினரின் ஈடுபாடு ஏதோ ஒரு சமயத்தில் இல்லாமல் இந்த நடவடிக்கையை திட்டமிட்டிருக்க முடியாது என்றும் கூறுகிறார்.
“இராணுவத் தளபதி தமது அலுவலகத்தில் இருந்துள்ளார். தாக்குதல் நடத்தப்படட்ட இடம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டிருந்தனர். பாகிஸ்தானின் ஹெலிகாப்டர்கள் அங்கு வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எனவே இவையெல்லாம், பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை காட்டும் அறிகுறிகளாகவே இருக்கின்றன.” என்கிறார் துரானி
எனவே அவர்களுக்கு அந்த நடவடிக்கை குறித்த முழுமையான தகவல்கள் தெரிந்திருக்காவிட்டாலும், சில விடயங்கள் தெரிந்திருக்கக் கூடும் என்றும் வாதிடுகிறார் ஐ எஸ் ஐ யின் முன்னாள் இயக்குநர் அசாத் துரானி
ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், தமது நாட்டின் நம்பகத்தன்மையை வேறு எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும், ஒரு நாட்டின் இறையாண்மை என்பது மதிக்கப்பட வேண்டும் எனவும் அதன் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்லாடன் வேட்டை குறித்து ஐஎஸ்ஐ
பாகிஸ்தானின் முக்கிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. வெளியிட்டுள்ள தகவல்களின்படி ஒஸாமா பின் லாடன் தங்கியிருந்த அந்த வீட்டில் தாக்குதல் நடந்த சமயத்தில் 17அல்லது 18 பேர் இருந்துள்ளனர். தாக்குதலின் பின்பு ஒஸாமா பின் லாடனின் உடலையும், உயிரோடு ஒருவரையும் அமெரிக்கர்கள் கொண்டு சென்றுள்ளனர். அவ்வாறு உயிரோடு கொண்டுசெல்லப்பட்டவர் பின் லாடனின் மகன்களில் ஒருவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த வீட்டு வளாகத்துக்குள்ளே நான்கு சடலங்கள் விட்டுச் செல்லப்பட்டிருந்தன. பின் லாடனின் வேறு ஒரு மகன், இரண்டு சகோதரர்கள் மற்றும் காவலர் ஒருவர் ஆகியோரின் சடலங்கள் அவை என்று கருதப்படுகிறது.
இத்தாக்குதலில் பின் லாடனின் மனைவி ஒருவரும், அவருடைய மகள் ஒருவரும், பின் லாடனின் குழந்தைகள் அல்லாத சிறார்கள் எனத் தெரியும் வேறு எட்டு அல்லது ஒன்பது பேரும் அவ்வீட்டில் இருந்துள்ளனர்.
உயிர் தப்பிய அப்பெண்கள் மற்றும் சிறார்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன என்றும், அமெரிக்கர்கள் வந்திருந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று பழுதாகி கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்படாது இருந்திருந்தால், இவர்களும் கொண்டுசெல்லப்பட்டிருப்பார்கள் என்றும் ஐ.எஸ்.ஐ. கூறுகிறது.
உயிர்தப்பிய பின்லாடனின் மனைவியிடம் ஐ.எஸ்.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் அவர் காயமடைந்து மயங்கி விழுந்தார் என்றும். பின்னர்தான் தனக்கு சுயநினைவு திரும்பியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் யெமென் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், சில மாதங்கள் முன்புதான் தான் அந்த இடத்துக்கு வந்ததாகவும் அவர் ஐ.எஸ்.ஐ.யிடம் கூறியுள்ளார்.
12 அல்லது 13 வயது மதிக்கத்தக்க பின் லாடனின் மகள், தனது தந்தை துப்பாக்கியால் சுடப்பட்டதை தான் பார்த்ததாகக் கூறி உறுதிசெய்துள்ளார்.
அந்த வீட்டில் விட்டுச் செல்லப்பட்ட சில ஆவணங்கள் சிலவற்றையும் ஐ.எஸ்.ஐ. கைப்பற்றியுள்ளது.
இந்தத் தாக்குதலில் மொத்தம் நான்கு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன அவற்றில் இரண்டுதான் அந்த வளாகத்தில் தரையிறங்கியிருந்தன.
உங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் என்று பாகிஸ்தான் சிப்பாய்கள் சொல்லியதாக அபொட்டாபாத்தில் உள்ள பின் லாடன் பதுங்கியிருந்த வீட்டின் அருகே குடியிருந்தவர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல என்றும், இப்படி ஒரு தாக்குதல் நடக்கப்போகிறது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் ஐ.எஸ்.ஐ. கூறுகிறது.
அவமானம்
தங்களுடைய மிகப் பெரிய இராணுவ மையம் ஒன்றிற்கு இவ்வளவு அருகில் வந்து ஒஸாமா தங்கியிருந்துள்ளார். அந்த கட்டிடத்தை இவர்கள் ஏன் கண்காணித்திருக்கவில்லை என்று ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, 2003ல் இந்த வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், அல்கைதா உறுப்பினர் அபு ஃபரஜ் அல் பிப்பி என்பவர் பதுங்கியிருக்கலாம் என்ற நோக்கில் அவ்வீட்டில் தாங்கள் தேடுதல் வேட்டை நடத்தியதாகவும், ஆனால் அதன் பின்னர் அவ்வீட்டைத் தாங்கள் கண்காணித்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தைக் கண்டுபிடிக்காமல் விட்டது தமக்கு பெரிய சங்கடத்தையும் அவமானத்தையும் தந்துள்ளது என ஐ.எஸ்.ஐ. கூறுகிறது. தாங்கள் கோட்டை விட்டு விட்டோம் என்று ஐ.எஸ்.ஐ. இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக்கொள்வது மிகவும் அரிதான விஷயம்.
ஒசாமா கொலை: தகவல்களில் மாற்றம்
பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.
முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது.
அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒஸாமா பின் லாடன் தன் மனைவியை முன்னால் பிடித்துக்கொண்டு அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்றிருந்தார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி செய்திருக்கவில்லை என்றும் இப்போது கூறப்பட்டுள்ளது.
அவசர அவசரமாக நிறைய தகவல்களை வெளியிட வேண்டி வந்ததால் விபரங்களில் இவ்வாறான திரிபுகள் நிகழ்ந்துவிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபரின் ஊடகத்துறைச் செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
"பின் லாடனின் மனைவி ஒருவர் அமெரிக்காவின் தாக்குதல் அணிச் சிப்பாய் ஒருவரை நோக்கி வேகமாகப் வந்தபோது அவரது காலில் சுடப்பட்டது. ஆனால் அவர் சாகடிக்கப்படவில்லை. பிற்பாடுதான் பின் லாடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் அச்சமயம் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை." என்று ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
பின் லாடன் கையில் துப்பாக்கி எதுவும் அச்சயமம் இருந்திருக்கவில்லை என்றாலும் பொதுவாக அந்த இடத்தில் பெருமளவான எதிர்ப்பை அமெரிக்கச் சிப்பாய்கள் சமாளிக்க வேண்டியிருந்தது என்றும், அந்த இடத்தில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்திருந்தது என்றும் ஜே கார்னி கூறியுள்ளார்.
பின்லாடனின் இரண்டு சகோதரர்கள் மற்றும் பெண்ணொருவர் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்று தற்போது தெரிவிக்கப்படுகிறது. பின்லாடனின் மகன் ஒருவர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்பாடு சொல்லப்பபட்டுள்ள விபரங்களில் அது பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.
இப்படிப்பட்ட குழப்பங்களால், பின் லாடனை உயிரோடு பிடிப்பது என்ற எண்ணமே அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளடது.
பின் லாடன் சடலத்தின் புகைப்படத்தை வெளியிடுவது பற்றி அமெரிக்க அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது. மோசமான அந்தப் புகைப்படம் வெளிவந்தால் உணர்வலைகள் தூண்டப்படலாம் என்று வெள்ளை மாளிகைப் ஊடகத் தொடர்பாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment