வஞ்சம் தீர்த்ததில் வெற்றி - புலம்புகின்றார் கருணாநிதி.
என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார். தனது மகள் கனிமொழியை 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளது குறித்து முன்னாள முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்
" தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்?
இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் போக விரும்பவில்லை.
இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தைத் தொடர்கிறார்கள். அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
"சன்' தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொண்டபோது, கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.
கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.
தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.
இறுதிப் போரில் வெல்வோம்: இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் " என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்த சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதிமாறன் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்:
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னுடைய மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியைச் சந்திக்க, திமுக தலைவர் கருணாநிதி நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார்.
தாம் டெல்லி புறப்படவுள்ள தகவலை கருணாநிதி சென்னையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
"திகார் சிறையில் இருக்கும் என் மகள் கனிமொழி, சரத்குமார், ராசா ஆகிய 3 பேரையும் பார்ப்பதற்காக நாளை டெல்லி செல்கிறேன்," என்றார் கருணாநிதி.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று, இரண்டு ஆண்டு முடிந்தததையொட்டி, பிரதமர் டெல்லியில் இன்று அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் யார் கலந்துகொள்கிறார்கள்? என்று கேட்டதற்கு, "நாடாளுமன்றத்தில் தி.மு.க. குழு தலைவராக டி.ஆர்.பாலு இருக்கிறார். அவர் பிரதமர் விருந்தில் கலந்து கொள்வார்," என்றார்.
டெல்லி பயணத்தில் சோனியாவை சந்திப்பீர்களா? என்றதற்கு, "நாளைய தினம் வாய்ப்பு இருக்காது என நினைக்கிறேன்," என்று கூறினார்.
உங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தற்போது உறவு எப்படி இருக்கிறது? என்று கேட்டதற்கு, "நீங்கள் விரும்புவதைப் போல் அப்படி எதுவும் இல்லை," என்றார் கருணாநிதி.
மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வை சேர்ந்த 6 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் யாரும் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.
டெல்லி சென்றிருந்த தி.மு.க. அமைச்சர்களும், எம்.பி.க்களும் நேற்று இரவே சென்னை திரும்பி விட்டனர்.
கனிமொழி கைது செய்யப்பட்டதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 3-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடும் மனநிலையில் இல்லாததால் தி.மு.க. இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக, பிரதமர் விருந்தை புறக்கணிப்பது சரியல்ல என்று முடிவெடுத்த திமுக தலைமை, தமது கட்சி சார்பில் டி.ஆர்.பாலுவை அனுப்பி வைக்கிறது.
முதல்வர் கருணாநிதி தனது டெல்லி பயணத்தின் போது, மகள் கனிமொழிக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது
0 comments :
Post a Comment