Tuesday, May 31, 2011

வன்னியில் புலிகளுக்கு எதிராக போராடிய நாய் மரணம். இராணுவ மரியாதையுடன் அடக்கம்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் – கொமாண்டோப் படையினரின் வழிகாட்டியாகச் செயற்பட்ட போது, காயமடைந்திருந்த ஸ்னோவி என்ற நாய் கடந்த 24ஆம் திகதி உயிரிழந்துள்ளது. 4வது கொமாண்டோப் படைப்பிரிவின் கோப்ரல் சம்பத் இந்த நாயை 2004ஆம் ஆண்டு தொடக்கம் பயிற்சி கொடுத்து பராமரித்து வந்திருக்கின்றார்.

இராணுவத்தில் எஸ்-080 என்ற இலக்கம் வழங்கப்பட்டிருந்த இந்த நாய் வெலிஓயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் மறைவிடங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது.

2008 மார்ச் 15ஆம் திகதி கெம்பிலிஓயா காட்டுப்பகுதியில் நடந்த மோதல் ஒன்றின்போது கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உடையின் ஒரு பகுதியை இந்த நாய் எடுத்து வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிர்த்திசையில் இருந்த மற்றொரு புலிகள் இயக்க உறுப்பினர் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் கைக்குண்டை வீசினார்.

கைக்குண்டு வெடிப்புச் சிதறல் ஒன்று ஸ்னோவியின் தலையில் பாய்ந்து படுகாயமடைந்தது. உடனடியாக அது உலங்கு வானூர்தி மூலம் அனுராதபுரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பெரதெனியாவில் உள்ள மிருக மருத்துவப் போதனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மிருக மருத்துவநிபுணர் அசோகா டங்கொல்ல தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு சத்திரசிகிச்சை மேற்கொண்டு இந்த நாயைக் காப்பாற்றினர்.

மிகவும் மோசமான நிலையில் காயமடைந்திருந்த இந்த நாய்க்கு வேறொரு நாயின் குருதியும் ஏற்றப்பட்டது. இந்த நாய் போரின்போது வழங்கிய பங்களிப்புக்காக ரணவிக்கிரம என்ற பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பல வெற்றிகளுக்கு இந்த நாய் காரணமாக இருந்தாக கொமாண்டோப் படைப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக வேவு நடவடிக்கைகளுக்காக மறைந்திருக்கும் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்களை காடுகளில் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளிலும், ஆழ ஊடுருவும் அணிகளுக்கான வழிகாட்டியாகவும் இந்த நாய் செயற்பட்டுள்ளது. இந்த நாயின் இழப்பு கொமாண்டோப் படைப்பிரிவின் றெஜிமென்ட் தலைமையகத்தில் இராணுவ மரியாதைகளின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் கொமாண்டோ படையினரும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com