Friday, May 13, 2011

தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்-ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

தமிழக மக்கள் நல்லாட்சியை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கை வீண் போகாது. அதிமுக ஆட்சியில் தேமுதிக பங்கு கேட்காதுஎன்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி விஜயகாந்த்தின் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. 26 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றுகிறது.

இதுகுறித்து விஜயகாந்த கருத்து தெரிவிக்கையில், திமுக அரசின் ஊழல் ஆட்சி, விலைவாசி ஏற்றம், திமுக அரசின் மின்சார வெட்டு, திமுக அரசின் அராஜக ஆட்சி, குடும்ப ஆட்சி இதெல்லாம் சேர்ந்துதான் இன்று திமுக ஆட்சியை மக்கள் மாற்றக் காரணம்.

நிச்சயமாக நல்லாட்சி தருவோம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்துள்ளனர். அது நிச்சயம் நடக்கும், மக்கள் நம்பி்க்கை வீண் போகாது.

பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற திமுகவினரின் கற்பனை உடைத்தெறியப்பட்டுள்ளது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவே ஜெயலலிதாவுடன் கைகோர்த்தோம். நாங்கள் விரும்பியிருந்தவாறு தனியாகவே போட்டியிட்டிருக்கலாம். ஆனால் அது திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்துவிடும். அதனால் அதைத் தவிர்த்துவிட்டு அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டோம் . அதிமுக ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். அந்தத் திட்டம் எங்களிடம் இல்லை.

அதிமுக ஆட்சியில் முதல் வேலையாக கேபிள் டிவியை அரசுடமையாக்கினால் சந்தோஷப்படும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.

மக்களுக்கும் சரி, திரையுலகினருக்கும் சரி இனி சுதந்திரம்தான். இனி அவர்கள் யாருடைய அடிமையும் இல்லை. சுதந்திரமாக செயல்படலாம். தன்னிச்சையாக செயல்படலாம்.

எனக்கும், எனது கட்சிக்கும் வாக்களித்த அத்தனை மக்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஷிவந்தியத்தில் என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், எனது கட்சித் தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com