ராகுல் காந்தி கைதானதை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
உத்தரபிரதேசத்தில், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரி உத்தரபிரதேச மாநிலம் பாட்டா பர்சால் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது வெடித்த கலவரத்தில் 2 போலீசார் அடித்துக் கொல்லப்பட்டனர். 2 விவசாயிகளும் பலி ஆனார்கள்.
இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அந்த கிராமத்துக்கு சென்று விவசாயிகளிடம் குறைகனை கேட்டதோடு, காங்கிரஸ் தொண்டர்களுடன் சேர்ந்து `தர்ணா' போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராகுல் காந்தியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர். அவருடன் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி உள்பட மேலும் சிலரும் கைதானார்கள்.
கஸ்னா போலீஸ் நிலையத்துக்கு ராகுல் காந்தியை கொண்டு சென்ற போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர். அவரை நேற்று முன்தினம் இரவு 2.15 மணிக்கு டெல்லி நகர எல்லை வரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விட்டு விட்டு திரும்பினார்கள்.
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து மாயாவதி அரசுக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் தலைநகர் லக்னோவில் சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி மாயாவதியின் உருவ பொம்மையையும் எரித்தார்கள்.
கான்பூர், பெரோசாபாத், வாரணாசி, ரேபரேலி, அலகாபாத், ஜான்சி, மீரட் உள்ளிட்ட நகரங்களிலும் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மாயாவதிக்கு எதிராக கோஷம் போட்டனர்.
கான்பூர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் லேசாக தடியடி நடத்தி விரட்டினார்கள்.
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் திக்விஜய் சிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், முதல்-மந்திரி மாயாவதியை சர்வாதிகாரி என்று வர்ணித்தார். பாட்டா பர்சால் கிராமத்தில் நடந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாயாவதி அரசுக்கு எதிரான காங்கிரசின் போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.
ராகுல்காந்தியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்ததை கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
0 comments :
Post a Comment