கண்ணிவெடிகளை அகற்ற 8 ஆண்டுகள் ஆகும்
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்ற இன்னும் 8 ஆண்டுகள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இது தெரியவந்துள்ளதாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த எவ்.எஸ்.டி என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் திட்ட முகாமையாளராகிய நைஜல் ரொபின்சன் கூறுகின்றார். போரர்ப்பிரதேசமாகத் திகழ்ந்த வடபகுதியில் கண்ணிவெடி மற்றும் குண்டுகள் வெடித்ததனால் ஏற்பட்ட விபத்துக்களில் கடந்த வருடம் மாத்திரம் 49 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜல் ரொபின்சன் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு இறந்தவர்களில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய தொழில்நுட்ப ஆலோசராகிய டொமினிக் மொரினும் ஒருவராவார். கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பணியின்போது வெடிப்பொருள் ஒன்றைக் கையாள்கையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அவர் இறந்துபோனார். இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் நினைவுச்சின்னம் ஒன்று வைக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்விடங்களில் கடந்த வருடம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதையடுத்து, அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனையடுத்து தற்போது அந்த மக்களின் விவசாய நிலங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக எவ்.எஸ்.டி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார்.
இலங்கையைப் பொருத்தமட்டில் சிவிலியன்களுக்கும், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்ற கண்ணிவெடிகள், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு விரைவாகத் திரும்பிச் செல்வதையும் தாமதப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
0 comments :
Post a Comment