2006 ஜூன் மாதத்தின் பின் நான் புலிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை
இலங்கையின் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா நடேசன், சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித் தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தொடர்பான சர்ச்சையில் தற்போது ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான பாலித கோஹன்னாவும் சிக்கியுள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரிலேயாவில் இருந்து வெளியாகும் தி.ஏஜ் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியின் மே 17 ஆம் திகதி காலை 9 மணியளிவில் அப்போதைய வெளியுறவுத் துறை செயலராக இருந்த பாலித கோஹன்னா - வேறோருவர் வழியாக புலிகளுக்கு அனுப்பிய செய்தியில் - படையினர் இருக்கும் திசை நோக்கி வெள்ளைக் கொடியோடு மெதுவாக நடந்து வாருங்கள் என்று கூறப்பட்டதாகவும்.
அதன் பிறகு வெள்ளைக் கொடியோடு வந்த சுமார் 20 விடுதலைப் புலியினர் அதற்கு அடுத்தநாள் 58 ஆவது டிவிஷனை நோக்கி வந்ததாகவும் - அரை மணி நேரத்துக்குள் அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மே 17 ஆம் திகதி காலை 8:46 மணி அளவில் கோஹன்னாவின் குறுந்தகவல் புலித்தேவனுக்கு மற்றொருவரால் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் இது போன்றதொரு குறுந்தகவலை செய்தியை நீங்கள் புலிகளுக்கு அனுப்பினீர்களா என்று பாலித கொஹன்னாவிடம் கேட்டபோது. அவ்வாறு இல்லை என்றும், அது விடுதலைப் புலிகளுக்காக தெரிவிக்கப்பட்ட ஒரு ஆலோசனையல்ல என்றும், தனக்கு வந்த ஒரு மின் அஞ்சல் கடிதம் ஒன்றுக்கு தான் தெரிவித்த பதில் தான் அது என்றும். வழமையாக என்ன முறையைக் கையாள வேண்டுமோ அதைப் பின்பற்றுங்கள் என்று தான் குறிப்பிட்டு அப்படி சொல்லியதாக கோஹன்ன கூறினார்.
போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் தான் நேரடியாக எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றும், ஏனெனில் அதற்கான எவ்வித அதிகாரமும் தனக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்று பாலித கோஹன்னா தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஜூன் 2006க்குப் பிறகு விடுதலைப் புலிகளைத் தான் ஒருமுறைகூட தொடர்புகொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நடேசன், புலித் தேவன் ஆகியோர் சரணடைய வரும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இலங்கை அரசு கடுமையாக மறுத்து வருகிறது.
சரணடைவது என்பது புலிகளின் சித்தாந்தத்துக்கு எதிரானது என்பதால் அவர்களை புலிகளே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூட படையினர் தரப்பில் கூறப்பட்டது. அதே போல இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே ஐ.நா - நோர்வே அதிகாரிகள் மற்றும் சில மேற்குலக பத்திரிக்கையாளர்களின் அனுசரணையோடு நடந்ததாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளில் அரசு தரப்பில் யார் யார் பங்கேற்றனர் அவர்கள் எத்தகைய உத்திரவாதங்களை வழங்கினர் என்பதையும் இலங்கை அரசு வெளிப்படையாக தெரிவிக்க மறுத்து வந்திருக்கிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக பேசும் ஐ.நா அதிகாரிகள் கூட சில தகவல்கள் வந்தன அவற்றை ஒரு தரப்பிலிருந்து மறு தரப்புக்கு அளித்தோம் என்று மட்டுமே தெரிவித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment