ஜப்பானில் தாய்ப்பாலிலும் கதிர்வீச்சு பரவியது; கர்ப்பிணி பெண்கள் பீதி
ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புகுஷிமா அணுஉலைகள் வெடித்தன. இதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சு உணவு பொருட்கள், குடிநீர், பால் போன்றவற்றில் பரவியது. இதைத் தொடர்ந்து அந்த அணு உலைகளை சுற்றி 20 கி.மீட்டர் சுற்றளவில் குடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். உணவு பொருட்களில் ஊடுருவி பரவி இருந்த அணு கதிர்வீச்சு தற்போது தாய்ப்பாலிலும் பரவி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள சிட்டிசன் மிரூட் என்ற அமைப்பு தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை கதிர்வீச்சு எந்த அளவில் பாதித்துள்ளது என கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 4 தாய்மார்களை கதிர்வீச்சு தாக்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் குழந்தைகளுக்கு புகட்டும் தாய்ப்பாலிலும் கதிர்வீச்சு தாக்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அது மிக குறைந்த அளவில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை ஜப்பான் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து சுகாதாரதுறை அமைச்சகம் விரிவான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் நேட்டோ கானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே குழந்தைகளுக்கு பாலூட்டும் எத்தனை தாய்மார்களை கதிர்வீச்சு பாதித்துள்ளது என்பதை கண்டறிய அரசு விரிவான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சிட்டிசன் அமைப்பின் தலைவர் கிகுகோ முராகமி கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்களை கதிர்வீச்சு பாதித்து இருப்பதால் கர்ப்பிணி பெண்களும் பீதி அடைந்துள்ளனர். தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளை கதிர்வீச்சு தாக்கியுள்ளதா?
என்பதை கண்டறிய மிகவும் பதட்டத்துடன் உள்ளனர். அணுஉலைகள் வெடித்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அப்பகுதியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேற அனுமதிக்கப்படவில்லை.
மேலும், அப்பகுதியில் நுழைய பிரதமர் நேட்டோ கான் தடை விதித்துள்ளார். இதற்கிடையே வெளியேறியவர்கள் தங்களது வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்து செல்ல பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்வீச்சு தாக்காத கவச உடைகளை அணிந்து தங்கள் பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
0 comments :
Post a Comment