நிபுணர் குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது!
இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா.வின் நிபுணர் குழுவானது முறையான அங்கமொன்றல்ல. அக்குழு தனக்கு வழங்கிய ஆணையை மீறிச் சென்றுள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று குற்றஞ்சாட்டினார்.
நல்லிணக்கத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை வெளியிடுவது அடிப்படைத் தவறாகும். நாம் ஐ.நா.வுக்கு என்ன கூறுகிறோம் என்றால் எம்மை இணைந்து செயற்பட விடுங்கள் என்பதே. இலங்கை அதன் இருண்ட காலங்களிலிருந்து விடுபட்டு வெளிவரும்போது அதற்கு ஐ.நா. உதவ வேண்டும்.
குறித்த அறிக்கை வெளியிடப்படும் பட்சத்தில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்க முடியாது. இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சவாலாக அமையும். அதனால் அவ்வறிக்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைய வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டமை தவறாகும்.
நல்லிணக்க ஆணைக்குழு நாட்டின் பல பாகங்களுக்கு சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களையும் பதிவுசெய்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டமை தவறானதாகும்.
நியூயோர்க்கிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி இந்த அறிக்கை அனுப்பப்பட்டது. அறிக்கை அனுப்பப்படும் போது அந்நாட்டு நேரப்படி பகல் 12.15 மணியாகவிருந்தது. அறிக்கையைப் பார்த்தவுடன் இலங்கை அரசு அதனை நிராகரிப்பதாக உடனே அறிவித்தது.
இதேவேளை, குறித்த அறிக்கையினை கசியவிடும் நடவடிக்கையிலும் இலங்கை அரசாங்கம் ஈடுபடவில்லை. குறித்த அறிக்கையின் முன்மொழிவுகளைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இல்லாமல் செய்யப்படும்.
200 பக்கங்கள் கொண்ட அறிக்கைக்கு ஏழு நாள் மற்றும் ஏழு மணித்தியாலத்திற்குள் பதிலளிக்க முடியாது. அத்துடன் இந்த நிபுணர் குழுவின் அறிக்கை மேற்கத்தேய ஆலோசனைகளுக்கிணங்க தயாரிக்கப்பட்டதாகும்.
குறித்த நிபுணர் குழு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்க அவரால் நியமிக்கப்பட்டதே தவிர ஐ.நாவின் எந்தவொரு சபையினாலும் நியமிக்கப்படவில்லை.
இலங்கையின் நீதிமன்ற முறைமை, சட்ட மா அதிபர் திணைக்களம், மக்களால் தெரிவுசெய்யப்பட்டோர் தொடர்பில் வெளிநாடுகளுக்கு கருத்து தெரிவிக்க முடியாது.
இலங்கையிலுள்ள பிரச்சினைக்கு முடிவு காண வெளிநாடுகள் நேர அவகாசம் வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதிலளிப்பதற்காக எந்தவொரு குழுவையும் இலங்கை அரசு நியமிக்கவில்லை.
நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது பிழை என்று கூறும் போது அது தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் மற்றும் முன்மொழிவுகள் எதனையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. குறித்த நிபுணர் குழு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் ஒரு குழுவே தவிர அது ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவல்ல.
நிபுணர் குழு புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. குற்றமிழைத்தவர்களை விசாரிக்கவுமில்லை. குறித்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டது’ என்று அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment