Saturday, April 23, 2011

இலங்கை சனத்தொகையை விட தொலை பேசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கை சனத்தொகை 2010ம் ஆண்டில் 20.65 மில்லியனாக இருந்தது. ஆயினும் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பாக தொலைபேசித் துறையின் வளர்ச்சி அதைவிட கூடுதலாக இருக்கின்றது. இலங்கையின் சனத்தொகை 20.65மில்லியனாக இருந்தாலும் எங்கள் நாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், வீடுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ள தொலைபேசிகள் மற்றும் சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் என்பன 20.8 மில்லியனாக இருக்கின்றது.

இந்த புள்ளி விபரங்களின் படி எங்கள் நாட்டின் ஒவ்வொரு பிரஜையிடமும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் தொலைபேசிகள் இருப்பது ஆதாரபூர்வமாக இப்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் தெரிவித்த தொலைத்தொடர்புகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் பின்தங்கிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களும் ஒரு கையடக்கத் தொலைபேசியை வைத்திருக்கிறார்கள் என்றார்.

வயலுக்கு சென்று விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் கையிலும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இன்று இருக்கின்றன. சில பிச்சைக்காரர்கள் கூட இரகசியமாக கைத்தொலைபேசிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பொதுவாக பாடசாலைகளுக்கு கைத்தொலைப்பேசிகள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவ, மாணவிகளும் இந்த தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து தங்கள் பைகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவசியம் ஏற்படும் போது அவற்றை அவர்கள் இயக்குகிறார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நூறு பேர்களுக்கு 100.8 கையடக்கத் தொலைபேசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் விடலைப் பருவத்தை சேர்ந்வர்களை தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய ஆபாச படங்களைக் கொண்ட இணையத்தளங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வசதியாக இருக்கின்றதென்று ஆசிரியர்களும் பெற்றோரும் கவலை கொண்டுள்ளார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com