ராஜபக்சவை சர்வதேச போர்குற்ற கூண்டில் நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டுமாம்.
ராஜபக்சே மற்றும் அவரது சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்குக்கு இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
"இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி.
இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகி, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை ராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் டி.வி. ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த இளைஞரின் பிணம், இதேபோன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டி விடப்பட்டது. இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே சர்வதேச நீதி மன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனிமொழி உள்பட தி.மு.க., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.
பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர். என்னதான் நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன.
தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வ தேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்து மீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை ராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது.
இதன் மூலம் வன்னி பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை ராணுவம் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.
ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும், வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உள்பட பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.
குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப்பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது. மருத்துவ மனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன. வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன.
மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன. போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத் திற்கு ஆளாக்கி இருக்கிறது.
இதன் மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்ட தோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவிற்கு வந்து விட்டது என்று கூறி 27.4.2009 அன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப்படு கொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்க்ள.
ராஜபக்சே மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வ தேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்12கை குறித்து சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்கள் வாய்மையற்றவை என்றாகி விடும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதாக வழி வகுக்கும்." என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment