Saturday, April 30, 2011

இளவரசர் வில்லியம் காதலி கேதரின் திருமணம்

லண்டன், ஏப். - 30 - சார்லஸ்-டயானா தம்பதிகளின் மகனான பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமிற்கும் அவரது 10 ஆண்டுகால காதலி கேதரின் மிடில்டனுக்கும் நேற்று லண்டனில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. லண்டனில், வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் உள்ள தேவாலயத்தில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். திருமணத்தைக்காண சுமார் 10 லட்சம் பேர் குவிந்ததால் லண்டன் மாநகரமே குலுங்கிப்போனது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேதரின் மிடில்டனை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி அவர்களின் திருமணம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான விரிவான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இதனால் லண்டன் நகரமே கடந்த சில நாட்களாக விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இந்த திருமண வைபவத்தில் பங்கேற்க 50 நாட்டு தலைவர்கள் உட்பட சுமார் 2000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நேற்று காலை இங்கிலாந்து நேரப்படி 8.15 மணிக்கு துவங்கின. இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தேவாலயத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் குடும்பத்தினரும் அடுத்தடுத்து தேவாலயத்திற்கு வந்தனர். மணமகள் கேதரின் குடும்பத்தினர் தேவாலயம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தனர். முன்னதாக மணமகன் வீட்டார் தேவாலயத்திற்கு வந்ததும், மணமகள் குடும்பத்தினரும் தேவாலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30) திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பிரிட்டீஷ் ராஜகுடும்பத்து திருமணங்கள் எப்போதுமே மிக விமர்சையாக நடத்தப்படும். அதைப்போலவே இந்த திருமணமும் வெகு விமரிசையாக நடந்தது. அதுவும் வில்லியம் பட்டத்து இளவரசர் என்பதால் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன. இந்த திருமணத்தைக் காண தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு குவிந்திருந்தார்கள். தாமதமாக சென்றால் இடம் கிடைக்காது என்பதால் நேற்று முன்தினமே தேவாலயம் பகுதியிலும், மணமக்கள் அரண்மனைக்கு செல்லும் பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். இவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அப்பகுதிகளில் திரண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் உலகமே ஆவலோடு எதிர்பார்த்த பிரிட்டீஸ் இளவரசர் வில்லியம் அவரது காதலி கேதரின் ஆகியோரது திருமணம் நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபேயில் உள்ள தேவாலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. அங்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. முன்னதாக மணமக்கள் இருவரும் ஊர்வலமாக காரில் அழைத்துவரப்பட்டனர். அவர்களை வழியெங்கும் திரண்டிருந்த மக்கள் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தனர். பின்னர் தேவாலயத்திற்கு மணமக்கள் வந்து சேர்ந்தனர். தனது 10 ஆண்டுகால காதலி கேதரின் விரலில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மோதிரம் அணிவித்து திருமணத்தை உறுதி செய்தார். அப்போது இருவரும் திருமண உறுதியேற்றுக்கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரத்தால் அந்த தேவாலயமே அதிர்ந்தது. பின்னர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. டயானா மறைவுக்கு பிறகு இப்படி ஒரு சிறப்பான திருமணம் லண்டனில் நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சார்லஸ், டயானா திருமணத்திற்கு பிறகு அரச குடும்பத்தில் இப்படி ஒரு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் மண்டியிட்டு நிற்க திருமண ஒப்பந்தம் வாசிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 90 தொலைக்காட்சிகள் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தன. 2001 ம் ஆண்டு ஆண்ட்ரூ பல்கலையில்தான் கேத்ரினை சந்தித்தார் இளவரசர் வில்லியம். இருவருக்கும் அப்போது காதல் மலர்ந்தது. இந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நேற்று திருமணத்தில் முடிந்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் கேதரின். நேற்று இளவரசரை கரம் பிடித்ததன் மூலம் இவரும் அரச குடும்பத்தில் இணைந்து விட்டார். 350 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் புறப்பட்டு சென்றனர். சார்லஸ், டயானா தம்பதிகள் சென்ற அதே சாரட் வண்டி நேற்று இவர்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இவர்களை பின் தொடர்ந்து ராணி எலிசபெத்தும் சென்றார். இவர்களது அணிவகுப்பு பக்கிம்ஹாம் அரண்மனையை அடைந்தது. முன்னதாக இவர்கள் செல்லும் வழியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து தம்பதிகளை பார்த்து உற்சாக வெள்ளத்தில் கையசைத்தனர். பின்னர் அரண்மனை மாடத்திற்கு சென்று தம்பதிகள் மக்களுக்கு காட்சியளித்தனர். அப்போது இளவரசர் வில்லியம், கேதரினுக்கு முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டார். முன்னதாக, இந்த திருமணத்தின் போது கேதரின் விரலில் மோதிரம் அணிவித்த வில்லியமும், அவரது மனைவி கேதரினும் இன்பத்திலும், துன்பத்திலும் இனி இணைபிரியாது இருப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு தேவாலய பதிவேட்டில் கையெழுத்திட்டனர். இந்த திருமணத்தையடுத்து கேம்பிரிட்ஜ் கோமகன் ஆகியிருக்கிறார் இளவரசர் வில்லியம். இந்த திருமணத்தையொட்டி லண்டனில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். லண்டன் நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த திருமணத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர். முன்னதாக திருமணத்தின்போது இளவரசர் வில்லியம் ராணுவ கர்னல் போன்று சிவப்பு உடையணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். கேதரின் பாரம்பரிய வெள்ளை உடையில் புன்னகையுடன் காணப்பட்டார். வில்லியமை கரம்பிடித்ததன் மூலம் தற்போது அவர் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்.
திருமண உறுதி மொழி

திருமண பந்தத்தில் கணவனாக தான் ஏற்கும் வில்லியம்முக்கு 'அன்பையும், ஆதரவையும், கௌரவத்தையும் வழங்குவேன்' என்று கேட் மிடில்டன் திருமண உறுதிமொழி வழங்கினார்.
வில்லியம்மின் தாயார் இளவரசி டயானா இளவரசர் சார்ல்ஸுடனான தனது திருமணத்தின்போது, 'கணவனுக்கு கீழ் படிந்து நடப்பேன்' என்ற வரிகளை தனது திருமண உறுதிமொழியில் சொல்லாததுபோலவே, கேட் மிடில்டனும் அவ்வார்த்தைகளை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசர் வில்லியம் அணிவித்த மோதிரத்தை கேட் மிடில்டன் அணிந்துள்ளார்.வேல்ஸிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட மோதிரம் இது.

விவாகரத்து வக்கீல் அறிவுரை!
இன்று திருமணம் செய்யவுள்ள இளவரசர் வில்லியமிடம், லண்டனின் பிரபல விவாகரத்து வக்கீல் ஆயிஷா வர்தக் சில அறிவுரைகளை வழங்கினார். திருமணத்துக்கு முன்பே கேத் மிடில்டனிடம் விவாகரத்து தொடர்பாக ஒப்பந்தம் செய்யும்படி கூறியுள்ளார். 'சொத்துக்காக திருமணம் செய்யவில்லை' என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். இதுபோன்ற ஒப்பந்தத்தை திருமணத்துக்கு முன் செய்துகொண்டால், ஒரு வேளை விவாகரத்து பெற்றால் அதிக அளவில் நஷ்டஈடு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது' என வில்லியமிடம் ஆயிஷா கூறியுள்ளார்.
ஆனால் இதுபோன்ற எந்த ஒப்பந்தமும் செய்யப்படாது என அரச குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.கடந்த 1981ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இளவரசர் சார்லசும் டயானாவும் 1996ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அப்போது நஷ்டஈடாக 17 மில்லியன் பவுண்ட் (ரூ.125 கோடி), ஜீவனாம்சமாக ஆண்டுதோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பவுண்ட்(ரூ.2 கோடியே 58 லட்சம்) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருந்து
புதுமணத் தம்பதி, அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ராணி எலிசபெத் மதிய விருந்து அளிக்கிறார். இரவு விருந்தை இளவரசர் சார்லஸ் அளிக்கிறார். திருமணம் முடிந்தபின் வில்லியம் பைலட்டாக பணியாற்றும், வேல்ஸ் பகுதியில் உள்ள ஆங்லசே என்ற இடத்தில் இருவரும் வசிப்பர் எனத் தெரிகிறது. ஜூனில் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
தீவிரவாதிகள்
வில்லியம் திருமண விழாவை சீர்குலைப்போம் என அயர்லாந்து தீவிரவாதிகள், முஸ்லிம் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முப்படையை சேர்ந்த 1.500 வீரர்களும் ஊர்வலப் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com