Wednesday, April 27, 2011

தனித்தமிழீழமே கருணாநிதியின் கொள்கையாம்

தனித் தமிழீழமே திமுகவின் குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இதை தொடர்ந்து திமுக தீர்மானம் மற்றும் திமுக உயர்நிலைக்கூட்டத் தீர்மானம் ஆகியவற்றை விளக்கும் வகையிலான ஊடகவியலாளர் மாநாடொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த தமிழக முதல்வர், தனி தமிழீழமே திமுகவின் குறிக்கோள் என்றார்.

அத்துடன், இலங்கை யுத்தக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள கருணாநிதி, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்;.

இதனால் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்ட குழு இன்று வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இன்று இடம்பெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விடயங்கள் கீழே.

இலங்கை யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.

இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com