ஆசிரியர்களின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு ஹக்கீமிடம் கோரிக்கை.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு வெளிமாவட்டங்களுக்கு எதிர்வரும் மே மாதம் வழங்கப்படவிருக்கும் இடமாற்றம் தொடர்பாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப்ஹக்கீமின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு ஆவன செய்யுமாறு அமைச்சர் ரவூப்ஹக்கீமிடம் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையிலான ஆசிரியர் குழு ஒன்று அமைச்சர் ரவூப்ஹக்கீமை நேரில் சந்தித்து விளக்கியது.
சாய்ந்தமருது சுகாதார நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது மே மாதம் முதல் அமுல்படுத்தப்படவிருக்கும் இந்த ஆசிரிய இடமாற்றத்தால் எதிர்நோக்கவிருக்கும் பல்வேறு பிரச்சினைகள், கல்விப் பாதிப்புக்கள் தொடர்பாக குழுவினர் அமைச்சர் ரவூப்ஹக்கீமிடம் எடுத்து விளக்கினர். அத்துடன் இந்த இடமாற்றத்திட்டத்தை அமுல்படுத்தாது தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறும் குழுவினர் அவரிடம் வலியுத்தினர்.
இது விடயமாகத் தாம் கிழக்கு மாகாண ஆளுனருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் ரவூப்ஹக்கீம் தம்மை சந்தித்த குழுவினரிடம் உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment