ஜப்பானில் மீண்டும் பூகம்பம்.
டோக்கியோ : ஜப்பானில் பயங்கர பூகம்பம் ஏற்பட்ட ஒரு மாத நினைவு நாளான நேற்று அதே பகுதியில் பயங்கர பூகம்பம் உலுக்கியது. சுனாமி எச்சரிக்கை வெளியிட்ட பல மணி நேரத்துக்கு பிறகு அது வாபஸ் பெறப்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் கடலுக்குள் கடந்த மாதம் 11ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.1 புள்ளிகளாக பதிவான பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்தன. சாலைகள் பிளந்தன. நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
அடுத்த சில மணி நேரத்தில் 48 அடி உயர சுனாமி பேரலைகள் செண்டாய், பியூகுஷிமா, மியாகி மாநில கடலோரப் பகுதிகளை நாசப்படுத்தின. இந்த பூகம்பம், சுனாமிக்கு பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயினர். அந்த இயற்கைப் பேரழிவில் இருந்து மீளாத நிலையில், பூகம்பத்தின் வெப்பம் காரணமாக பியூகுஷிமா டைச்சி அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. அவற்றில் இருந்து கதிர்வீச்சு கடலிலும், காற்றிலும் பரவி பேராபத்தை ஏற்படுத்தியது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பியூகுஷிமா நகரை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், பயங்கர பூகம்பத்தின் தொடர்ச்சியான நில அதிர்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 6 முதல் 7 புள்ளிகள் வரை பூகம்பங்கள் பதிவாகின. அதனால், பீதி நீடித்து வந்தது. பூகம்பம் சின்னாபின்னப்படுத்தி ஒரு மாதமான நினைவு நாளான நேற்று அதே பகுதியில் மீண்டும் பூகம்பம் உலுக்கியது. ரிக்டரில் 7.1 புள்ளியாக அது பதிவானதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
பியூகுஷிமாவில் இருந்து 86 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 10 கி.மீ. ஆழத்தில் பூகம்பத்தின் மையம் இருந்தது. எனவே, மீண்டும் சுனாமி அலைகள் எழக்கூடும் என்று ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்தது. கடலோர மக்கள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால், சில மணி நேரங்களுக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இதற்கிடையே, 7 புள்ளிகளுக்கு மேல் பூகம்பம் நீடிப்பதால் மீண்டும் அணு உலையில் கதிர்வீச்சு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால் அதை சுற்றி வசிக்கும் மக்கள் உடனடியாக வேறு நகரங்களுக்கு இடம்பெயறும்படி ஜப்பான் அரசு நேற்று உத்தரவிட்டது.
0 comments :
Post a Comment