யாழ் இராணுவத் தளபதியின் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள்.
யாழில் புதுவருடக் கொண்டாட்டம் குறித்து தான் வெளியிட்ட கருத்தில் எதுவித அரசியல் இலாபம் தேடும் நோக்கமும் இல்லையெனவும் அக்கருத்து மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன் எனவும் தமிழர் விடுலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
யாழ்ப்பாண கட்டளைத்தளபதி மேஐர் ஜெனரல் மஹீந்த ஹத்துருசிங்க எனது கடிதத்தை தவறான அர்த்தத்தில் விளங்கிக்கொணடுள்ளமை துரதிருஸ்டவசமானதே.
வேறு சிலரைப் போல குறுகிய வழியில் பிரபல்யம் அடைவதும், அரசியல் இலாபம் தேடுவதும் எனது இயல்பல்ல. ஒரு சிலரைப் போல் நான் செயற்பட்டிருந்தால் இன்று பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன் என்பதனை மாண்புமிகு ஐனாதிபதியில் இருந்து இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
இந்த நாட்டில் உள்ள தேசப்பற்றாளர்களை போல நானும் ஒரு தேசப்பற்றாளனாக இருப்பதையும் எச்சந்தர்ப்பத்திலும் தேசப்பற்றற்றவனாக இருந்ததில்லை என்பதனையும் முழு நாடுமே நன்கு அறியும். நான் எதைச்செய்தாலும் எப்பொழுதும் நாட்டின் நன்மை கருதியே செயற்படுவேன். ஆனால் அத்தகைய செயற்பாடுகள் எல்லோருக்கும் எவ்வேளையிலும் பிடித்தமானதாக இருக்காது.
மேஐர் ஜெனரல் அவர்களுடைய கண்ணியம் பற்றி நான் நன்கு அறிவேன். அதே வேளை இந்த நாட்டினதும் அதன் மக்களினதும் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளேன் என்பதனையும் அவர் அறியவேண்டும். நான் இந் நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவன்;. ஆனால் என் இன மக்களே என்னை சரியாக புரிந்து கொள்ளாத நிலையில் மற்றவர்கள் என்னை சரியாக புரிந்து கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கமுடியாது.
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய கட்டளை தளபதிகளில் நான் சந்திக்காதது இவரை மட்டுமே. அவ்வாறு சந்தித்திருந்தால், எம் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கும். அவர் கூறுவது போல நாட்டில் அமைதியை, மக்களின் சகவாழ்வை குழப்பும் தீய எண்ணத்தை உருவாக்கும் எண்ணமே என்னிடம் இல்லை.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இன்றுவரை எப்பொழுதுமே எமது இராணுவத்தினரின் மனிதாபிமான செயற்பாடுகள் பற்றி பாராட்டி வந்ததோடு அவர்களின், சகல பிரிவினரையும் குறிப்பாக பெண் இராணுவ, பெண் பொலிஸாரை மிகவும் பாராட்டி வந்திருக்கின்றேன்.
இதனையே புலம் பெயர்ந்த தமிழர்களும் செய்துவந்தார்கள். எவரின் உள்ளத்தையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. சிவில் நிர்வாகத்தை, சேர்த்து அனைவருக்கும் சொத்து சுகம் இழந்தவர்களுடைய கசப்பான உணர்வுகள் பற்றியும், அவர்கள் எந்த கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதற்கான மனநிலையில் இல்லை என்பதையும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
இராணுவம் மக்களுக்கு நெருக்குவாரம் கொடுக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் குறிப்பாக இராணுவத்தின் மீது சுமத்தவில்லை. ஆனால் இராணுவம் பிரசன்னமாக இருப்பதே இராணுவம் அழுத்தம் கொடுக்கின்றது என்ற உணர்வை மக்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.
இராணுவத்தின் வேண்டுகோளை மறுக்கின்ற தைரியம் மக்களுக்கு வராது. எனது அபிப்பிராயத்தின்படி இத்தகைய விழாக்களில் இராணுவத்தின் தீவிர பங்களிப்பு எதிர்பார்த்த பலனைத் தராது என்பதோடு சர்வதேச சமூகத்தினையும் சந்தேகக்கண்னோடு பார்க்க வைக்கும்.
எப்போதும் கடிதத்தையும் அறிக்கையையும் பத்திரிகைகளுக்கு விடுவதோடு அதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைநகல் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தெரிவிப்பது என்னுடைய வழக்கம்.
இச்சந்தர்ப்பத்தில் கட்டளைத்தளபதியின் தொலை நகல் இலக்கமோ மின்னஞ்சல் முகவரியோ தெரியாமையால் விடயத்தின் அவசியத்தை உணர்ந்து தளபதிக்குரிய கடிதத்தை தபாலில் சேர்த்தேன்.
இதன் மூலம் நான மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி, தலைவர் தமிழர் விடுலைக் கூட்டணி.
0 comments :
Post a Comment