அழைப்பின்றி வந்ததால் முறையாக கவனிக்க முடியவில்லை - இந்தியா
நடந்து முடிந்த இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 10ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியை காண இந்தியா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்திய அரசாங்கத்தால் சரிவர கவனிக்கப்படவில்லை என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியை காணச் சென்ற ஜனாதிபதி 30 ஆசன ஒதுக்கீட்டைக் கோரியிருந்தார். எனினும் அவருக்கு 10 ஆசனங்களே வழங்கப்பட்டன.
இறுதிப் போட்டியை காண அதிக அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்பட்டிருந்தால் தாம் மகிழ்ச்சியடைந்திருப்போம் என இந்தியாவிற்கான இலங்கை கொன்சூல் ஜெனரல் உப்பெக்கா சமரதுங்க இந்திய ஊடகமொன்றிற்குத் தெரித்துள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றதன் பின்னர் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியை காண ஜனாதிபதி தயாராகினார்.
எனினும் போட்டியை காணச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு இந்தியாவில் உரிய கவனிப்புக்கள் கிடைக்கவில்லை என உப்பெக்கா சமரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் இந்தியாவில் வைத்து இலங்கை அணியை சந்திக்க ஜனாதிபதி அனுமதி கோரியிருந்ததுடன் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
மேலும் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியுடன் இருந்து புகைப்படம் எடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை காண வருமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருந்ததனால் அவர் முறையாகக் கவனிக்கப்பட்டார் என இந்தியா பதிலளித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அழைப்பின்றி தனிப்பட்ட ரீதியில் இந்தியாவிற்கு வந்ததன் காரணமாகவே அவரை முறையாக கவனிக்க முடியவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிரேஸ்ட நிர்வாக அதிகாரி ரட்னகார் செட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி உரிய முறையில் கவனிக்கப்படாமை குறித்து இந்திய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதென இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்த்தானிகர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment