”ஷாப்பிங் காம்ப்ளக்ஸில்” 7 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர்: சுட்டுக்கொண்டு தற்கொலை!
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே உள்ள ஆல்பென் ஆன்டென் ரிஜின் நகரில் வணிக வளாகம் உள்ளது. நேற்று அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த எந்திர துப்பாக்கியால் வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களை கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. வணிக வளாகத்தில் இருந்த மக்கள் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார்கள். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மர்ம வாலிபரை பிடிக்க அங்கிருந்த வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் பொதுமக்களை சுட்டுக்கொன்ற மர்ம வாலிபர், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.
ஆனால் அவர் நெதர்லாந்து குடியுரிமை பெற்றவர். ஆல்பென் நகரை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். எதற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் எனத் தெரியவில்லை. இச்சம்பவத்துக்கு நெதர்லாந்து ராணி பியாட்ரிஸ், பிரதமர் மார்க்ரூட் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment