Wednesday, April 20, 2011

இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள பிஎஸ்எல்வி-சி16 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

சென்னை: 3 செயற்கை கோள்களுடன் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள பிஎஸ்எல்வி- சி16 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10 மணி 12 நிமிடத்துக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில், இந்திய விஞ்ஞானிகளால் பிஎஸ்எல்வி-சி16 என்ற ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 44.4 மீட்டர் உயரம், 295 டன் எடை கொண்டுள்ளது. 4 நிலைகள் உள்ள இந்த ராக்கெட்டில் திட, திரவ, வாயு நிலையில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளது. முதல் நிலையில் 138 டன் எடை கொண்ட திட எரிபொருளும், 2வது நிலையில் 41 டன் எடையுள்ள திரவ எரிபொருளும், 3வது நிலையில் 7.6 டன் எடையுள்ள திட எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளது. 4வது நிலையில் இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்டு, இரண்டரை டன் எடையுள்ள திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளது.

ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை இந்திய விஞ்ஞானிகள் செய்து ராக்கெட் விண்ணில் ஏவப்படு வதற்கான 'கவுன்ட் டவுன்' நேற்று முன்தினம் அதிகாலை 3.42 மணிக்கு தொடங்கியது. பிஎஸ்எல்வி- சி16 ராக்கெட்டில் 3 அதிநவீன செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, 1,206 கிலோ எடையுள்ள 'ரிசோர்ஸ்சாட்-2' என்ற இந்திய செயற்கை கோள் ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.

இதில் அதிநவீன 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் விவசாய பயிர்களின் ஆரோக் கியம், நிலத்தடி நீர், வனப்பகுதி ஆராயச்சி, ஏரி மற்றும் குளங்களின் தண்ணீர் அளவு, இமயமலை பகுதிகளில் பனி உருகுவதை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உன்னிப்பாக படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும் பணிகளை செய்யும்.

இந்திய- ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான 92 கிலோ எடையுள்ள 'யூத்சாட்' செயற்கை கோளும் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இது, சுற்றுச்சூழல் மற்றும் சூரியனும் அதன் தாக்கம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும். சிங்கப்பூரை சேர்ந்த நனியாங் பல்கலைக்கழகம் உருவாக்கிய 106 கிலோ எடையுள்ள 'எக்ஸ் சாட்' செயற்கைகோள் பூமியை படம் எடுத்து அனுப்பி வைக்கும் பணிகளை செய்யும். இந்த செயற்கைகோள்கள் பெங்களூர், லக்னோ, மொரீஷியஸ், இந்தோனேஷியா, நார்வே, அன்டார்டிக்கா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் இருந்து கண்காணிக்கப்படும்.

இதுகுறித்து, இஸ்ரோவின் திரவ உந்து சக்தி அமைப்பு மைய இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறுகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டப்படி ராக்கெட்டின் செயல்பாடுகள் உள்ளது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com