தமிழ்நாட்டில் புலிகள் பயிற்சி முகாம்கள்? காவல்துறை தலைமையகமும் மறுக்கின்றது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் டி.எம்.ஜெயரத்ன, தமிழ்நாடு, கேரளா எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகள் 4 முகாம்களில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றும், அதனை சிறிலங்க அரசின் உளவுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது என்றும், அவர்கள் இலங்கையில் மீண்டும் இரத்தக் களறியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலை யில் அவருடைய கூற்றை இலங்கைக்கான இந்திய தூதரகம் மறுத்துரைத்துள்ள அதே நேரம் இச்கூற்று எவ்வித அடிப்படை ஆதாரங்களும் அற்றது என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் லத்திகா சரண் கூறியுள்ளார்.
இச்செய்திகளை மறுத்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள காவல் துறை தலைமை இயக்குனர் லத்திகா சரண், 'தமிழ்நாட்டில் புலிகளுக்கு எந்த பயிற்சி முகாமும் இல்லை. அவ்வாறு இருப்பதாக கூறி வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அடிப்படையற்றவை, எதார்த்த தொடர்பற்றவை' என்று கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி, சென்னை எழும்பூரிலுள்ள மஹா போதி சங்கத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான் என்று சிறிலங்க பிரதமர் கூறியிருந்ததையும் மறுத்துள்ள லத்திகா சரண், அத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
'இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் இங்கு இருப்பதாக கூறப்படுவதை மறுக்கின்றோம்' என்று லத்திகா சரண் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அத்துடன் புலிகள் குறித்து தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு விழுப்புடன் செயலாற்றி வருவதாகவும், அவர்களின் நடமாட்டத்தை கடலோர பாதுகாப்புப் படையும் கண்காணித்து வருவதாகவும் லத்திகா சரண் கூறியுள்ளார்.
சிறிலங்க பிரதமர் கூறுவதுபோல், அமெரிக்காவில் உள்ள வி.ருத்ரகுமாரன், நோர்வேயிலுள்ள நெடியவன் அல்லது விநாயகம் ஆகியோரின் பயிற்சி முகாம்கள் எதுவும் இங்கில்லை, அவர்கள் இந்தியத் தலைவர்களை கொல்லவும், அதன் மூலம் இலங்கையில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் புலேந்திரன் மாஸ்டர் ஒரு இரகசிய முகாமை நடத்திவருகிறார் என்ற கூற்றையும் மறுக்கிறோம்' என்று லத்திகா சரண் கூறியுள்ளார்.
மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சும் மறுப்பு
புpரதமரின் கூற்று தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சக பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ், இலங்கைப் பிரதமரின் குற்றச்சாற்றை இந்திய அரசு வலிமையாக மறுப்பதாகக் கூறியுள்ளார்.
'சிறிலங்க பிரதமர் குற்றச்சாற்றை நாங்கள் வலிமையாக மறுக்கின்றோம். இப்படிப்பட்ட பிரச்சனையை இந்திய அரசிடம் நேரடியாக சிறிலங்க அரசு எழுப்பவில்லை. ஆனால் அந்நாட்டு பிரதமர் பேசியிருப்பது துரதிருஷ்டவசமானது' என்று விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.
'இப்படிப்பட்ட குற்றச்சாற்றுகள் கூறுவதை எதிர்காலத்திலாவது இலங்கை அரசு தவிர்த்திட வேண்டும்' என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment