Monday, March 14, 2011

ஜப்பானில் மேலும் இரண்டு அணு உலைகள் எந்த நேரமும் வெடிக்கும் அபாயம்!

ஜப்பானில் புகுஷிமா நகரில் உள்ள மேலும் இரண்டு அணு உலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ளன. இதனால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டுகிறது.

ஜப்பானில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட மிகப்பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அணு உலைகளில் உள்ள குளிரூட்டிகள் அனைத்தும் சேதமடைந்தன. அவற்றுக்கு மின்சாரம் அளிக்கும் ஜெனரேட்டர்களும் பாதிக்கப்பட்டன. எனவே, அணு மூலப்பொருட்கள் உருகி, அணுக்கதிர் வீச்சு வெளியாகும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அணு உலை அவசர நிலை பிரகடனம் வெளியானது.

எனினும், டோக்கியோவில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள புகுஷிமா அணு உலையின் முதலாவது பிரிவு நேற்றுமுன்தினம் பிற்பகலில் பலத்த சப்தத்துடன் வெடித்தது. அதன் தொடர்ச்சியாக, முதலில் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்று, 20 கி.மீ. சுற்றளவில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே, மூன்றரை லட்சம் பேர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புகுஷிமாவில் உள்ள டைச்சி அணு உலை வெடித்ததால் ஏற்பட்ட கதிர்வீச்சின் அளவானது, பாதுகாப்பு அளவையும் தாண்டி விட்டதாக அந்த உலையை இயக்கும் டோக்கியோ எலக்டிரிக் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், `மக்களின் உடல் நலனுக்கு உடனடியாக பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும் மிகவும் குறைந்த அழுத்தத்திலான கதிர்வீச்சு அது' என்றும் கூறியுள்ளது.

ஆனால், அணு உலை வெடிப்பால் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ளும் ஆடைகளை அணிந்தபடி வேலைகளை செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கும் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து தப்பிக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அணு உலையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவில் உள்ள குளிரூட்டிகளும் செயலிழந்தன. எனவே, அங்கும் அணு மூலப் பொருட்கள் உருகி விபத்து ஏற்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இரண்டு உலைகளும் எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம் உள்ளது. `மற்றொரு வெடிப்பு நிகழாது என உறுதியாக சொல்ல முடியாது. வெடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன' என ஜப்பான் மந்திரிசபை செயலாளர் யுகியோ தெரிவித்தார்.

இதுபோல, மூன்றாவது பிரிவின் குளிரூட்டி நடைமுறைகளும் செயலிழந்து விட்டன. எனவே, அங்கும் அழுத்தம் அதிகரித்து வருவதாக அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர். அங்குள்ள அணுப் பொருட்கள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு அணு உலைகளும் வெடித்தால் மிகவும் மோசமான அளவில் பாதிப்பு ஏற்படும். உலக அளவில், 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படும் மிகப் பெரிய அணு பேரழிவாக இருக்கும்.

இதற்கிடையே, அந்த அணு உலையின் 3-வது பிரிவை காப்பாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். கடல் நீரை `பம்ப்' செய்து குளிரூட்டும் பணிகளில் என்ஜினீயர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதல் இரண்டு அணுஉலை பிரிவுகளில் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு 3-வது பிரிவை பாதுகாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக ஜப்பான் மந்திரிசபை தலைமை செயலாளர் யுகியோ எடனோ தெரிவித்தார்.

அணுமின் உலைகள் செயல்படுவது எப்படி?

* ஒவ்வொரு அணுமின் உலையிலும், அணுக்கருப் பிளப்புக்கு முக்கியமான யுரேனியம் அல்லது புளூட்டோனியம் கம்பிகள் இருக்கும். இவை "கோர்" எனப்படும்.
* உலையின் மையப் பகுதியில் உள்ள நீரில் "கோர்" வைக்கப்பட்டிருக்கும். அணுக்கருப் பிளப்பைக் கட்டுக்குள் வைப்பதற்கு, போரான் அல்லது காட்மியம் ஆகியவை ஒரு ஒழுங்கில் வைக்கப்படும். இவை கட்டுப்பாட்டுக் கம்பிகள் எனப்படும்.
* மேலும் அணுக்கருப் பிளப்பு என்பது நடக்கும் போது ஏற்படும் உஷ்ணம் அளவு கடந்து இருக்கும். அது அந்த கலன்களுக்குள் இருந்து வெளியேறா வகையில் முதல் நிலைசுற்றுச் சுவர் இருக்கும்.
* இதையடுத்து, வெளியில் இரண்டாம் நிலை கொள்கலச் சுவர் கட்டப்பட்டிருக்கும்.
* நீராவிக் கொள்கலன், கண்டன்சர், டர்பைன், ஜெனரேட்டர், குளிரூட்டும் கோபுரம் ஆகியவை பிற முக்கிய கருவிகள்.
* அணுக்கருப் பிளப்பு மூலம் வெளிப்படும் அபார வெப்பத்தில் நீரைச் சூடாக்கி நீராவியாக்கி, அந்நீராவி மூலம் டர்பைன் இயக்கப்பட்டு, அதன் மூலம் ஜெனரேட்டரில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
* மின் தயாரிப்புக்கு ஆதாரமாகவும், உலையில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்கும் திரவமாகவும் நீரே பயன்படுத்தப்படும்.
* புக்குஷிமா முதல் உலை வெடிவிபத்தில், உலையில் வெப்பம் அதிகரித்து, வெளியேறி இரண்டாம் நிலை கொள்கலச் சுவர் உடைந்து விழுந்தது.
* உலையில் வெப்பம் அதிகரிக்குமானால், "கோர்" கம்பிகள் உருகி, அடிப்புறம் வழியாக பூமியில் பரவும்.
* இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கும் விதத்தில் தான், ஜப்பானில் அணு மின் உலைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* அணுஉலை இயக்கம் உடனடியாக நின்றுவிட்டாலும், அதன் உஷ்ண அளவைக் குறைப்பது அவ்வளவு சுலபமல்ல.

கதிர்வீச்சினால் என்ன அபாயம்?

* காற்றில் கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பதை குமட்டல், வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் அறிய முடியும்.
* அளவு, அபாய கட்டத்தை தாண்டும் போது, உடனடியாக மரணம் நிகழும்.
* நீண்ட கால அபாயமாக புற்றுநோய் உருவாகும்.
* உடலின் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும்.
* குறிப்பாக, குழந்தைகளை கதிர்வீச்சு மிக அதிகளவில் பாதிக்கும். செர்னோபிள் அணு உலை விபத்தை அடுத்து அப்பகுதியில் வசித்த குழந்தைகள் தான், தைராய்டு புற்றுநோயால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com