சரண் அடைய மாட்டேன் : கடாபி அறிவிப்பு
லிபியா அதிபர் கடாபி மக்கள் முன் தோன்றி பேசினார். அப்போது உயிர் தியாகம் செய்தாலும் செய்வேனே தவிர, மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன் என்று அறிவித்தார். வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் 41 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்படி போராட்டம் நடத்தும் மக்கள் மீது லிபிய ராணுவம் குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. மக்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ராணுவம் லிபியா நாட்டில் திரிபோலி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று 4-வது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதன் முறையாக கடாபி மக்கள் முன்தோன்றி பேசினார். திரிபோலியில் உள்ள பாப் அல் அஜிஜியா வீட்டில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் இருந்து தான் அவரது அரசாங்கம் செயல்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் அந்த கட்டிடம் தரைமட்டமானது. அதே வளாகத்தில் உள்ள இன்னொரு கட்டிடத்தில் பால்கனியில் நின்றபடி ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார். இதை லிபியா டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அப்போது அவர் கூறியதாவது:-
பேராசை பிடித்த பாசிஸ்டுகளால் நம் நாடு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். தியாகியாக மரணம் அடைவேனே தவிர, சரண் அடையமாட்டேன்.
எந்த வகையிலாவது அவர்களை தோற்கடிப்போம். யுத்தத்துக்கு தயாராக இருக்கிறோம். அது குறுகிய காலத்துக்கு இருந்தாலும் சரி. நீண்டகாலத்துக்கு இருந்தாலும் சரி. எதற்கும் தயாராக இருக்கிறோம். முடிவில் நாம் தான் வெற்றி பெறுவோம். இந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். நான் இங்குதான் உயிர்விடுவேன். நான் இங்கே தான் தங்கி இருக்கிறேன். என் வீடு இது தான்.
அநீதியான இந்த தாக்குதலை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் தாக்குதல் ஐ.நா. விதிமுறைக்கு எதிரானது.
நம் மீது தாக்குதல் நடத்தும் பாசிஸ்டுகள் சரித்திரத்தின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்படுவார்கள்.
எனக்கு எதிரான கிளர்ச்சியை ஒடுக்குவேன். எனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் எலிகள், கூலிப்படைகள். அவர்களுக்கு மரண தண்டனை காத்து இருக்கிறது. நான் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் வீடு, வீடாக சென்று கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை அகற்ற வேண்டும். அவர்கள் சரண் அடையும் வரை இந்த சுத்திகரிப்பு பணி நடத்தப்பட வேண்டும். அவர்கள் வீதிக்கு வந்து தங்கள் விசுவாசத்தை காட்ட வேண்டும்.
கடாபியை நேசிப்பவர்கள் பயப்படக்கூடாது. கிளர்ச்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும். அவர்களை பிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு கடாபி கூறினார்.
0 comments :
Post a Comment