Thursday, March 10, 2011

தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் –கோப்பாயில் நடந்தது என்ன?

தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் –கோப்பாயில் நடந்தது என்ன? யுத்தம் முடிவுற்றுள்ள இவ்வேளையில் கலாசார சீர்கேடுகள் பற்றியதான செய்திகள் பத்திரிகைகளை , இணையத்தளங்களை நிரப்பி வழிகின்றன. முன்னர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பத்திரிகைகள், இணையங்கள் பெரும்பாலும் யுத்தச் செய்திகளைத் தாங்கியனவாகவே அமைந்திருந்தன.

இதனால் மக்களின் மனநிலை யுத்தச் சூழலைச் சுற்றியதாகவே அமைந்திருந்தது. ஆனால், இன்று நிலமை அவ்வாறில்லை. யுத்த மேகங்கள் நீங்கி அமைதிச் சூழ்நிலை கருக்கொள்ளும் இவ்வேளையில் பத்திரிகைகளை நிரப்புவதற்கு கலாசார சீர்கேடுகள் பற்றியதான செய்திகள் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றன.

அந்த வகையில் குடாநாட்டுப் பத்திரிகை ஒன்றில் அண்மையில் வந்த ஒரு செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. "பிறந்த உடனேயே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம்' என்று தலைப்பிட்டு வந்த செய்தியே அது. என்னடா கன்றாவி என்று அச் செய்தி பற்றி விரிவாக அறிய கண்கள் அப்பக்கம் திரும்பின.

குறித்த சிசுவைப் பிரசவித்த பெண் ஏற்கெனவே திருமணமாகியவர் என்றும் தனது முதற்கணவரை விட்டுப் பிரிந்த நிலையில் இன்னொரு ஆண் துணையுடன் கோப்பாய்ப் பகுதியில் வசித்து வந்தார் என்றும் அப் பெண்ணுக்கு 10 வயதில் ஏற்கெனவே பெண்பிள்ளை ஒன்றும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தனது முதற்கணவனை விட்டுப் பிரிந்து கோப்பாயில் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்து இருக்கையில் முறை தவறிய நடத்தையால் அப்பெண் கர்ப்பமானார்.

இதனால் மனமுடைந்த குறித்த பெண் கல்வியங்காட்டுப் பகுதியிலுள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் கருவைக் கலைக்கச் சென்ற போது குறித்த வைத்திய நிலையத்தை நடத்தும் வைத்தியர், அப்பெண்ணை பரிசோதித்துப் பார்த்துவிட்டு வயிற்றில் வளரும் கரு அழிக்க முடியாதிருப்பதாக கூறினார். இதற்குத் தீர்வு காண்பதற்கு அனுகுமாறு கூறியுள்ளார்.

வைத்தியரின் பரிந்துரையின் படி பிறிதொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓரிரு நாட்கள் கழிந்த பின்னர் கோப்பாயில் பதியப்படாத கணவருடன் தங்கியிருந்த போது திடீரென வயிறு வலியெடுக்கவே அப்பெண்மணி அலறியடித்துடித்துள்ளார்.

அப்பெண்மணியின் அவலக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தார் அக்குறித்த வீட்டுக்குள் நுழைந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. குறை மாதத்தில் சிசு இறந்து பிறந்திருந்தது. அக் குழந்தையை பிரவசவித்த தாய் மயங்கித் கிடந்தார். உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பிரஸ்தாப தாய் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். வீட்டில் இருந்த குறித்த ஆண் சிசுவை வீட்டின் கொல்லைப்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.

இதைவிட பரிதாபம் என்னவென்றால் புதைக்கும் போது அந்த நபர் மதுபோதையில் இருந்துள்ளான். இதனால் பிரஸ்தாப பெண்ணின் 10 வயது மகளைக் கொண்டே குழியை வெட்டுவித்துள்ளான். வெட்ட முடியாமல் திண்டாடிய சிறுமி மீது வன்முறையைப் பிரயோகித்து குழியை வெட்டுமாறு வற்புறுத்தியுள்ளான். ஏதும் அறியõத அந்த அப்பாவிக் குழந்தை தனது துயரை யாரிடம் சொல்லி அழும் பாவம்! அந்த மனித மிருகம் தன்னையும் வேட்டையாடி விடுமோ என்ற பயத்தினால் வேறு வழியின்றி தன்னிடமிருந்த உயர்ந்த பட்ச வலுவையும் பிரயோகித்து தனது பிஞ்சுக்கரங்களால் குழி வெட்டி தனது தாயாருக்கு முறைதவறிப்பிறந்த சிசுவின் சடலத்தைப் புதைத்துள்ளது.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தவர்களால் உடனடியாக கோப்பாய் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. யாழ்ப்பாண நீதிமன்றில் இச்சம்பவத்தை பாரப்படுத்தியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்த நீதிவான் உரிய விசாரணை நடத்தியதுடன் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறுமியை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் சேர்க்குமாறும் கட்டளையிட்டார். கோப்பாய் பகுதியில் நெஞ்சை உலுக்கும் நிட்டூரமான சம்பவத்தினால் அப்பகுதியெங்கும் பரபரப்புக் குடி கொண்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடா நாட்டைப் பொறுத்தவரை இப்படியான கள்ளக்காதல் தொடர்புகள் அதிகரித்துள்ளன. இதன் பின்னணியில் வேண்டத்தகாத கர்ப்பங்களும் அதிகரித்துள்ளன. அதேவேளை, சட்ட விரோதமான முறையில் இயங்கி வருகின்ற கருக்கலைப்பு நிலையங்களில் தமது உயிரையே அடகு வைத்து கருக்கலைப்புச் செய்யும் பெண்களின் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது. சிற்சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தாலும் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வராத சங்கதிகளாக குடத்துள் விளக்குப் போல அமுங்கி அல்லது அமுக்கப்பட்டு விடுகின்றன.

யாழ்ப்பாணக் குடா நாடு தற்போது கலாசாரச் சீரழிவின் உச்சத்தில் உள்ளது. தமிழினத்தின் பெருமை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பதால் எந்தவிதப் பயனும் ஏற்படப்போவதில்லை. சிறுமைத்தனமான செயல்கள் குறித்தும் சிந்திக்கத் தவறியதால்தான் இத்தகைய இழிநிலைக்கு இன்று எம்மினம் தள்ளப்பட்டுள்ளது. எமது சமூகம் இன்று குட்டிச் சுவராகப் போனதற்கு கல்விமான்களுக்கும் பங்கு உண்டு என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கற்றவர்கள் கயவர்களாக இருக்கும் போது கண்ணியத்தை எதிர்பார்க்க முடியாது என்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அர்த்தம் மிகுந்த வாசகத்தை ஒரு தடவை இவ்விடத்தில் சிந்திப்பது பொருத்தமானதே. ஆக, அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எல்லோரது கரங்களிலும் உண்டென்பதை யாராலும் தட்டிக்கழிக்க முடியாது.

இதற்கென சட்டங்களில் இறுக்கமான நடைமுறைகளை அமுல்படுத்தி, தவறு செய்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தயவு தாட்சண்ணியமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தாழ்மையான வேண்டுதல் ஆகும்.

யாழ்மண்ணுக்காக உதிஷ்டிரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com