அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்
லிபியா மீது அமெரிக்க கூட்டு படைகள் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில், பிரான்ஸின் ஜெட் போர்விமானங்கள் முதலில் குண்டு மழை பொழிந்தன. அதே வேளையில் அமெரிக்கா, பிரிட்டனின் போர்க் கப்பல்கள், மற்றும் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட டாமஹாக் வகை ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.
இந்தத் தாக்குதலின்போது 48 பேர் கொல்லப்பட்டனர் என லிபிய தொலைக்காட்சி அறிவித்தது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என அது தெரிவித்தது. ஆனால் வேறு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்தத் தாக்குதலின்போது, பல லிபிய விமானப் படை தளவாடங்கள் தகர்க்கப்பட்டன எனத் தெரிகிறது.
லிபியாவில், அதிபர் கடாஃபியின் 41 ஆண்டு ஆட்சிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக கிளர்ச்சி நடந்து வருகிறது. கிளர்ச்சி ஆயுதப் போராட்டமாக மாறியது. இதனைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாஃபி.
போர்விமானங்கள் மூலம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, ஐ.நா.வில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, லிபிய நாட்டு மக்களைக் காக்கும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என பாதுகாப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில், லிபியாவுக்கு எதிராக சனிக்கிழமையன்று அமெரிக்கா தலைமையில் தாக்குதல் தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்கு "ஆபரேஷன் ஒடிசி டான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டு இராக் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, அரபு பிரதேசத்தில் மேற்கத்திய நாடுகள் நடத்தும் மிகப் பெரிய ராணுவத் தாக்குதல் இது. கனடா, இத்தாலியும் தாக்குதலில் பங்கேற்கின்றன.
இதில், தலைநகர் திரிபோலி, மிசுராட்டா பகுதிகளில் அமைந்துள்ள 20 லிபிய விமானப் படையின் பாதுகாப்பு தளவாடங்கள் தகர்க்கப்பட்டன. இந்த தகவலை அமெரிக்க கப்பற்படை துணை தளபதி வில்லியம் கோர்ட்னி வாஷிங்டனில் தெரிவித்தார்.
கடாஃபியின் தலைமையிடம் எனக் கருதப்படும் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது.
லிபிய விமானப்படை பாதுகாப்புத் தளவாடங்கள் வெகுவாக சேதமுற்றன என ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்ததாக அல்-ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதற்கு கடாஃபியின் தரைப்படை எந்தவித பதிலடி தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அந்த அதிகாரி கூறினார்.
தாக்குதல் வெற்றிகரம்- பிரிட்டன்: அமெரிக்க நேசப் படைகளின் தாக்குதல் வெற்றிகரமாக இருந்தது என பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியம் ஃபாக்ஸ் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் டொர்னேடோ போர்விமானங்கள் இங்கிலாந்தின் நார்ஃபோக் தளத்திலிருந்து திரிபோலி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கிப் பறந்து சென்று குண்டுகளைப் பொழிந்து தாக்குதல் நடத்தின.
விரைவில், டைஃபூன் ரக போர்விமானங்களும் ஈடுபடுத்தப்படும் என தெரிவித்தார். இவை தெற்கு இத்தாலியிலுள்ள ராணுவ மையத்திலிருந்து இயக்கப்படும்.
தேவையெனில், மேலும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் கூறினார். தனது குடிமக்களையே தாக்கி வரும் கடாஃபியை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை அடக்கியே தீருவேன் என கடாஃபி சூளுரைத்தார். லிபியாவை ஆக்கிரமிக்க எண்ணும் மேற்கத்திய நாடுகளின் எண்ணம் நிறைவேறாது. ஆயுதக் கிடங்கை மக்களுக்காகத் திறந்துவிடுவேன். இது நீண்ட போராக இருக்கும். லிபிய சுதந்திரத்தையும், ஒற்றுமையையும், மானத்தையும் பாதுகாக்கும் தருணம் இது என்றார் அவர்.
0 comments :
Post a Comment