உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கிவிட்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற கடும் தொனியில் உத்தரவு.
சிறை வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவிற்கு சிறைச்சாலைக்குள் உடற்பயிற்சி உபகரண வசதிகள் செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதும் இதுவரையில் அவருக்கு எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நலின் லதுகெட்டி தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடி விவகார வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.
உடனடியாக மேல் நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு, நீதிமன்ற உத்தரவை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும், நீதிமன்றை ஏன் இவ்வாறு அவமதித்து செயற்படுவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வினவியபோது பதிலளித்த சிறைச்சாலை அதிகாரிகள், பிரதான சிறைச்சாலை அலுவலகத்தில் இருந்து தமக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என கூறியுள்ளனர்.
நீதிமன்ற அனுமதி இருக்கும் போது எதற்காக பிரதான சிறைச்சாலை அலுவலகத்தின் அனுமதி என வினவிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, உடனடியாக சரத் பொன்சேகாவிற்குத் தேவையான உடற்பயிற்சி வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுக்குமாறும், அது குறித்து அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறும் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment