விடுதலைப் போராட்டப் படையை உருவாக்க ஆனந்தசங்கரி முயற்சிக்கின்றார்: முரளிதரன்
அக்கரைப்பற்றின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டு வருடங்களாக விடுதலைப் புலிகளையும், தமிழரசுக் கட்சியையும் தாறுமாறாக விமர்சித்து வந்தவர்தான் ஆனந்த சங்கரி ஐயா. இன்று அவர் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுதந்திரமாக உலாவித் திரிந்து கொண்டு வீரவசனம் பேசித் திரிகின்றார்.
அவரது செயற்பாடுகளை பார்க்கும் போது இன்னொரு விடுதலைப் பேராட்டத்துக்கான இன்னொரு இளைஞர் படையை உருவாக்க முயற்சிக்கின்றாரோ என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறு ஆனந்தசங்கரி இன்று வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திரமாகத் திரிவதற்குக் காரணம் இன்றைய சமாதானமே. அதனை இன்றைய அரசாங்கமே ஏற்படுத்தியது என்பதை மறந்துவிடக் கூடாது.
நானும் கடந்த 30 வருட காலமாக உலகில் தலைசிறந்த அணியில் அங்கம் வகித்து ஆயுதம் தூக்கிப் போராடியவன்தான். மிகவும் விசுவாசமாக தாய் மண்ணிற்காக அனைத்தையும் துறந்து தீவிரமாகப் போராடினேன்.தலைமைக்கும் இயக்கத்திற்கும் விசுவாசமாக பல்வேறு போர்க்களத்தில் தலைமை தாங்கி நடாத்தினேன். ஆனால், இறுதி நேரத்தில் பிரபாகரனது நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு விடிவையோ தீர்வையோ தராது என்று நம்பினேன்.
அவரிடம் சொல்லிப் பார்த்தேன். அவர் விடாப்பிடியாக அடம் பிடித்தார். நடந்ததை அறிவீர்கள். அப்போது அவரை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. விலகினேன். அன்று பலர் என்னைத் துரோகி என்றனர். ஆனால், இறுதி நேரத்தில் நான் எடுத்த தீர்க்க தரிசனமான முடிவால் சமார் 20 ஆயிரம் கிழக்குப் புலிகள் காப்பாற்றப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் இன்றும் என்னைத் தெய்வமாக வணங்குகின்றனர். அந்த யுத்தத்தில் எனது ஒரே அண்ணனை இழந்தேன்.
சும்மா வெறுமனே அரசுக்கு ஏசிக்கொண்டிருப்பதால், அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டிருப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. உண்மை நிலையை அறியாது தமிழர் கூட்டமைப்பினர் புலிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு நாடகமாடினர். அவர்களால் அக்காலகட்டத்தில் கூட வட கிழக்குப் பகுதிகளுக்கு வர முடியாமல் போய்விட்டதை மறந்திருக்க முடியாது.
ஆனால் இன்றைய சூழலில் அவர்கள் வருகிறார்கள். பேசுகிறார்கள். இக்கூட்டமைப்பினரால் இதுவரை தமிழ் மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன? இது பற்றி தமிழ் புத்திஜீவிகள் நன்கு சிந்திக்க வேண்டும்.
அரசு போரில் வெற்றிபெற்று சமாதான சூழ்நிலையைக் கொண்டு வந்ததும் இன்று தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழ்கிறார்கள். வெளிநாட்டில் பல்லாண்டுகாலம் வாழ்ந்த தமிழ் மக்கள் கூட இன்று இலங்கைக்கு வருகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இராணுவம் வைத்திருந்த பல இடங்களை தமிழ் மக்களிடம் வழங்கி வருகிறது.
அண்மைய வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தபோது அவர்களுக்கு யார் உதவினார்கள் என்பதை மக்கள் நன்கறிவர். இந்தக் கூட்டமைப்பில் யார் அவர்களுக்கு உதவினார்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை. நாம் மட்டும் வாழ்ந்தால் சரி என்று நினைப்பவர்கள் அவர்கள். தமிழ் மண்ணைக் காப்பாற்றுவோம், மக்களைக் காப்பாற்றுவோம் என மார்தட்டிப் பேசுவார்கள்.
இன்று மீண்டும் வந்து தமிழ் மண்ணைக் கைப்பற்ற வேண்டும். அது எம்மால்தான் முடியும். தமிழ்த்தேசியம் வாழ வேண்டும் என்றெல்லாம் பேசுவார்கள். நாம் எதற்கும் சோரம் போக மாட்டோம் என்பார்கள். சங்கரி ஐயாவுக்கு இவையெல்லாம் நன்கு தெரியும். இருந்தும் மீண்டும் ஒருதரம் பரீட்சித்துப் பார்க்க களமிறங்கியுள்ளார். என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment