Tuesday, March 15, 2011

இந்தியாவை புறந்தள்ளி அமெரிக்காவிடம் உதவி கோரினார் கோட்டா. விக்கிலீக்ஸ்

இந்தியாவினால் வழங்கப்பட்ட ரேடார்களில் கோளாஎறு ஏற்பட்டதால், இலங்கை அரசாங்கம் கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் ரேடார்களை கோரியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ரேடார்கள், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை கண்காணிக்கவும், தடுக்கவும் போதுமானதாக இருக்கவில்லை என இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை விமானப் படையினரின் தாக்குதல் திறனை வலுப்படுத்தும் பொருட்டு, அமெரிக்காவின் இராணுவ குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்புமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரியதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது

கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கான அப்போதைய அமெரிக்க தூதுவர் ராபர்ட் ஓ பிளேக்கிற்கும், அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும் கோத்தபாய கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகளின் விமானங்கள், தாக்கியதைத் தொடர்ந்து, அவசர கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டு எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அத்துடன் இந்த தாக்குதலை நடத்த விடுதலைப்புலிகள் தயரானதை, இந்தியா வழங்கி இருந்த ரேடாரினால் கண்காணிக்க முடியாது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைசகத்திற்கு அனுப்பப்பட்ட ரகசிய தொலைத் தொடர்பு தகவல் அடிப்படையில், இந்தியாவின் ரேடார்கள் விடுதலைப் புலிகளை கண்காணிக்க போதுமானதாக இல்லை என கோத்தபாய கூறியிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்தியாவை புறக்கணித்து, அமெரிக்காவிடம் ரேடார்களை கோரிய செய்தி அந்த காலப்பகுதியில் வெளியான போதும் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.

பல வருடங்களுக்கு பின்னர் இந்தியா இரண்டு ரேடார்களை வழங்கி இருந்தது. அவை இரண்டும் இரு பரிமாண ரேடார்களாக அமைந்துள்ளது.அத்துடன் மேலும் இரண்டு இரு பரிமாண ரேடார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தாங்கள் இந்தியாவிடம் முப்பரிமான ரேடர்களை வழங்குமாறு கோரியபோதும், அவை வராததன் காரணமாக, சீனாவில் இருந்து முப்பரிமாண ரேடார் ஒன்றை வாங்கியுள்ளோம். இதுவே தற்போது செயற்பாட்டில் உள்ளது என கோத்தபாய அமெரிக்க தூதரகத்திடம் தெரிவித்திருந்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது

இந்தியாவினால் வழங்கப்பட்ட ரேடார்களில் இரவு வேளையில் வான்பரப்பில் செல்லும் ஹெலிகாப்டர்களைக் கூட கண்காணிக்க முடியவில்லை என கோத்தபாய, ராபர்ட்டிடம் தெரிவித்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  March 15, 2011 at 12:44 PM  

இதில் என்ன தவறு?விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் அறுவை வர வர தாங்க முடியவில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com