அறிவுப் பசிக்கு உதவிய ஆர். ஆர். பூபாலசிங்கம் - வி. ரி. இளங்கோவன்-
தற்போதைய யாழ். நவீன சந்தைக் கட்டிடம் அப்போது கட்டப்படவில்லை. அந்த இடத்தில் தான் அன்றைய பஸ் நிலையம் அமைந்திருந்தது. அதற்கு மேற்குப்புறமாகக் கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம். அதனருகாமையில் மேற்குப்புறமாகத் தகரக் கூரைகளுடன் வரிசையாகப் பல கடைகள். அதிகமானவை குளிர்பானம், பிஸ்கட் முதலியன விற்கப்படும் கடைகள். அவற்றின் நடுவே ஒரு புத்தகசாலை.
அந்தப் புத்தகசாலையின் உள்ளேயும், வாசலிலும் தினசரி பல இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்களைக் காணலாம். உள்ளே ஓர் உயர்ந்த கறுப்பு உருவம், வெள்ளை வேட்டி, அதற்கேற்ற வெள்ளை நாசனல் - சேட், சிவப்பு நிற 'மவ்ளர்" தோளில் - சிலவேளை நாரியில் இறுக்கக்கட்டியபடி, சிலவேளை நெற்றியில் சந்தனப் பொட்டு, பளிச்சிடும் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரிக்கும் அழகு, அன்பாகப் பண்பாகப் பேச்சு. ஆமாம்.. அவர் தான் அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் ஆர். ஆர். பூபாலசிங்கம்.
அறுபதுகளின் முற்பகுதி. எனக்கு பன்னிரண்டு - பதின்மூன்று வயதிருக்கும். வாரவிடுமுறை தினங்களில் அல்லது பாடசாலை விடுமுறை நாட்களில் எனது மூத்த சகோதரர் நாவேந்தனின் அழைப்பின்பேரில் புங்குடுதீவிலிருந்து யாழ். வந்து அந்தப் புத்தகசாலையில் அவரைச் சந்திப்பதற்காகக் காத்துநிற்பேன். நாவேந்தன் அண்ணர் அங்கு வந்ததும் 'எப்படி.. நாவேந்தன்..." என முதலில் புத்தகசாலை உரிமையாளர் நலம் விசாரிப்பார். இருவரும் சில விடயங்களைப்பற்றி பேசிக்கொள்வர். பின்பு அங்கு நிற்கும் சக எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடன் அண்ணர் உரையாடிக்கொள்வார். சில பத்திரிகைகள் - நூல்களை எடுத்துப் பார்ப்பார் - வாங்கிக்கொள்வார். அவ்வேளை யானும் சில நூல்களை - பத்திரிகைகளை அங்கு புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
இப்படியாகப் பத்திரிகை - புத்தகங்களைப் புத்தகசாலையின் உள்ளே நின்று எடுத்துப் பார்ப்பதுவும், தேவையானவற்றை வாங்கிக்கொள்வதுவுமான பழக்கம் பூபாலசிங்கம் புத்தகசாலையில், யான் நாட்டைவிட்டுப் புறப்படும்வரை தொடர்ந்தது எனலாம்.
அந்தக் காலத்தில் இரசிகமணி கனக செந்திநாதன், சு. இராஜநாயகம், கே. டானியல், டொமினிக் ஜீவா, அகஸ்தியர், அம்பி, தேவன் யாழ்ப்பாணம், நந்தி, தில்லைச்சிவன், சொக்கன், முருகையன், சோமகாந்தன், காரை சுந்தரம்பிள்ளை ஆகியோரையும் பின்னர் அறுபதுகளின் பிற்பகுதியில் செ. யோகநாதன், தெணியான், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகியோருட்படப் பல பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் அந்தப் புத்தகசாலையில் தான் பலதடவைகள் பார்த்திருக்கிறேன் - பேசியிருக்கிறேன்.
கஸ்தூரியார் வீதியின் ஆரம்பத்தில் - ஆஸ்பத்திரி வீதியில் இருந்த, எமது ஊரைச் சேர்ந்தவரின் உணவகமான 'பிருந்தாவனம் ஹோட்டல்" பிரசித்திபெற்றது. அதன் உரிமையாளர் பொன்னையா தமிழரசுக்கட்சியின் தீவிர விசுவாசி. எனது சகோதரரின் நண்பர். ஆரம்ப காலத்தில் தீவகத்தில், குறிப்பாகப் புங்குடுதீவில் தமிழரசுக் கட்சியை அறிமுகப்படுத்திய நாவேந்தன் அண்ணருக்கு உறுதுணையாக நின்ற மனிதர். 1961 -ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தவேளை சத்தியாக்கிரகிகளுக்கு உணவளித்த பிரமுகர்.
அந்த உணவகத்தில் குடும்பமாக அமர்ந்து உணவருந்த தனித்தனியாகச் சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த ஒதுக்கிடங்களில் எனது சகோதரர் நாவேந்தன், அடுத்த சகோதரர் துரைசிங்கம் ஆகியோர் அமர்ந்து பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்;கிவந்த பத்திரிகைகளை, புத்தகங்களை வாசித்தவாறு தேனீர் அருந்துவர். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் எழுதிக்கொண்டிருப்பர். யானும் அதில் கலந்துகொள்வேன். பின்னர் மீண்டும் அருகிலுள்ள புத்தகசாலைக்குத் திரும்பி தாம் சந்திக்க வேண்டியவர்கள் - எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் அங்கு வந்தார்களா எனக் கண்டு பேசி மகிழ்வர். அவ்வாறு கலை இலக்கிய, அரசியல்துறை சார்ந்த சகலரும் சந்திக்கும் - பேசிக்கொள்ளும், சிலவேளை புரிந்துணர்வோடு விவாதித்துக்கொள்ளும் - சர்ச்சைப்படும் இடமாகப் பூபாலசிங்கம் புத்தகசாலை விளங்கியதை யான் அன்று பாடசாலை மாணவப் பருவத்திலேயே பார்த்திருக்கிறேன். மிக இளம் வயதிலேயே கலை இலக்கிய, அரசியல் பிரமுகர்கள் பலரையும் பார்த்துப்பேசும் சந்தர்ப்பங்கள் எனக்குச் சகோதரர் நாவேந்தன் மூலம் பூபாலசிங்கம் புத்தகசாலையிலேயே அதிகமாகக் கிடைத்தது எனலாம்.
அந்தக் காலத்தில் பல்வேறு அரசியல் முரண்பாடு கொண்டவர்களும் அந்தப் புத்தகசாலையில் சந்தித்துக்கொள்வர். விவாதித்துக்கொள்வர். அவ்வேளை எனது சகோதரர் தமிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கியாக - அவர்களின் இலக்கியப் பிரதிநிதியாக விளங்கியவர். அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் நாவேந்தன், புதுமைலோலன் ஆகியோர் விளங்கினர் என விமர்சகர்கள் குறிப்பிடுவர். ஆர். ஆர். பூபாலசிங்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர். இருப்பினும் மற்றக் கட்சிகளின் பிரமுகர்கள் - இலக்கியவாதிகள் எவராயினும் அவரது புத்தகசாலைக்கு வரத்தவறியதில்லை. காரணம்... பூபாலசிங்கம் அவர்களின் அன்பும் பண்பும் நிறைந்த பேச்சு - உபசரிப்பு. அத்துடன் அன்று மார்க்ஸிச நூல்களை இந்தியாவிலிருந்தும், கொழும்பிலிருந்தும் உடனுக்குடன் பெற்று வாசிக்க பூபாலசிங்கம் புத்தகசாலையே உதவியாக விளங்கியது.
மார்க்ஸிசக் கருத்துக்களைப் பரப்பும் பத்திரிகைகளை விநியோகித்ததின் காரணமாகப் பொலிசாரின் தாக்குதல்களுக்கும் பூபாலசிங்கம் அவர்கள் ஆளாகியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குப் பிரதேச சுயாட்சியே ஏற்றது எனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை வலியுறுத்தவும் அவர் தவறியதில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ சார்பாகத் தம்மை இனங்காட்டி நின்றார். அதன் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய தோழமை உறவு இருந்தது. இருப்பினும் அன்று பலம்பெற்றிருந்த சீனச்சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அவர் நேரடியாக எவ்வேளையிலும் முரண்பட்டதில்லை. எல்லோருடனும் அவர் தோழமையைப் பேணத் தவறவில்லை.
யாழ். புதிய பஸ் நிலையம் முன்பாக மூலைக்கடையில் பூபாலசிங்கம் புத்தகசாலை இயங்கியதுடன் அதன் கிளைகளும் நகரின் சில பகுதிகளில் இயங்கின. 1981 ஜூன் முதல் நாளில், தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்குக் கேடுசெய்யத் திட்டமிட்டவர்கள் கல்விக்களஞ்சியமாகத் திகழ்ந்த யாழ். பொதுசன நூல்நிலையத்தைத் தீயினால் பொசுக்கியபோது, பூபாலசிங்கம் புத்தகசாலைகளையும் விட்டுவைக்காமைக்குக் காரணம் அவற்றின் முக்கியத்துவமே..! எத்தகைய இழப்புகள் ஏற்படினும், துயர்கள் எதிர்வந்தபோதிலும் துவண்டுவிடாமல் விடாமுயற்சியால் புத்தகசாலையைத் தளிர்க்கவைத்தார்.
நூல்நிலைய எரிப்பை, உண்மை நிலைமைகளைத் தமது கட்சித் தலைவர்கள் மூலம் தென்னிலங்கையில் சிங்கள, ஆங்கில ஏடுகளில் வெளிவர ஆவன செய்தார். யாழ். பொதுசன நூலகத்தின் மீள்விப்புக்கு உதவும் பணிகளையும் மேற்கொண்டாரென அன்றைய மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ சார்புத் தலைவர்கள், தமிழக கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள், இலக்கியவாதிகள் யாராகினும் யாழ்ப்பாணம் வந்தால் அவர்களுக்குப் பூபாலசிங்கம் அவர்களின் வீட்டில் நிச்சயமாக உபசரிப்பு நிகழும். அவரது சொந்த ஊரான நயினாதீவைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் முன்மாதிரியானவராக, பெருமைக்குரியவராக, உதவுகின்ற பரோபகாரியாகத் திகழ்ந்தார்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலை இலக்கிய, அரசியல்வாதிகள் அத்தனைபேரினதும் அறிவுப்பசிக்குப் பூபாலசிங்கம் புத்தகசாலை ஓர் சத்திரமாகவே விளங்கியது எனலாம்.
எழுபதுகளின் பிற்பகுதியில் அப்புத்தகசாலையில் பத்திரிகை விற்பனைப் பகுதிக்கு யாழூர்; துரை என்னும் எழுத்தாளர் பொறுப்பாக இருந்தார். வார மாத சஞ்சிகைப் பகுதிகளைத் தர்மராசா என்ற இளைஞர் பார்த்துக்கொள்வார். நண்பகல் வேளைகளில் தினசரி யான் அங்கு சென்று, அவர்களுக்குப் பக்கத்தில் நின்று, அன்று வந்த சகல பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுத் தேவையானவற்றை வாங்கிக்கொள்வது வழக்கம். அவ்வேளைகளில் மூத்த எழுத்தாளர், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா உட்படப் பல எழுத்தாளர்களும், ஆசிரியர்களும் அங்கு வந்து என்னைப் போன்றே அவர்களும் பத்திரிகை - சஞ்சிகைகளை மேலோட்டமாகப் பார்ப்பர். தேவையானவற்றை வாங்கிக்கொள்வர்.
பத்திரிகைப் பகுதிப் பொறுப்பாளர் யாழூர் துரைக்கு உதவியாக அவரது மருமகன் ரவி என்ற உயர்தர வகுப்பு மாணவரும் அங்கு சிலவேளை நிற்பார். அவரும் சஞ்சிகைப் பகுதிப் பொறுப்பாளரும் எம்மைப்போன்று தினசரி வந்து பத்திரிகை - சஞ்சிகை வாசிப்போருக்கு 'ஓர் குறிப்புச் சொல்" வைத்துத் தமக்குள் பேசிக்கொள்வர். அது என்னவெனில் (15 ஃ 3) 'பதினைந்தின்கீழ் மூன்று" சங்கக்காரர் என்பது. 15 - ழு, 3 - ஊ என்பதாகும். அதாவது ஓசியில் (ழு.ஊ) எல்லாம் படிப்பவர்கள் என்பதாகும். இது எமக்கும் தெரிந்திருந்தது.
ஒரு நாள் இவ்வாறு அவர்கள் தமக்குள் பேசிக்கொள்ளும்போது யான் 'தம்பியவை... நீங்க.. சின்னப் பிள்ளைகள்.. நாங்க.. எத்தனையோ வருசமா இப்படித்தான் வந்து பார்க்கிறனாங்கள்.. உங்களுக்குத் தெரியாவிட்டால் உள்ளே முதலாளி இருக்கிறார்.. கேட்டுத் தெரிஞ்சுகொள்ளுங்கோ.. " என்று சிரித்துக்கொண்டே கூறினேன். அருகில் டொமினிக் ஜீவா புன்முறுவலோடு ஏதோவொரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
அன்று மாலை தோழர் பூபாலசிங்கம் அவர்களிடம்... 'தம்பியவை.. அவர்கள் இலக்கியவாதிகள்... எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.. நம்பிக்கையானவர்கள்.. மரியாதைக்குரியவர்கள்.. அவர்கள் எதை எடுத்து வாசித்தாலும் ஒன்றும் சொல்லாமல் பண்பாக நடந்துகொள்ளுங்கள்.." என்று சொன்னாராம்.
இந்தப் பண்பு - தோழமை தான் தோழர் பூபாலசிங்கம் அவர்களைச் சகல இலக்கியவாதிகள் மனதிலும் பதியவைத்தது.
பாரிஸ் நகரில் அறிவுசார் தமிழ்ப் புத்தகசாலையாக விளங்குவது 'அறிவாலயம் புத்தகசாலை". இதன் உரிமையாளர் நண்பர் சிவதாஸ். சிலவேளைகளில் யான் அங்கு பத்திரிகை - சஞ்சிகைகளை எடுத்து மேலோட்டமாகப் பார்க்கும்போது சிவதாஸ் பலர் முன்னிலையிலும் பகிடியாக, 'இது என்ன யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை என்ற நினைப்போ...?" என்பார். அப்போது யானும் அவருக்குப் பகிடியாக அதிரடி மறுமொழி சொல்வதுண்டு. அந்தளவுக்கு பூபாலசிங்கம் புத்தகசாலை இலக்கிய வாசகர்களின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் கூடமாக விளங்கியதை யாவரும் அறிந்திருந்தனர்.
மரணம் நிச்சயமானது தான். என்றாலும் இலக்கிய நெஞ்சங்களையெல்லாம் தோழர் பூபாலசிங்கம் அவர்களின் மரணம் துயரில் ஆழ்த்திவிட்டது என்பது உண்மை..!
தமிழறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல, சிறுகக்கட்டி பெருக வாழ்ந்த பூபாலசிங்கம் அவர்களுக்குப் புத்திர சந்தானமும், புத்தக சந்தானமும் புகழ்பாடும் எச்சங்களாய் உள்ளன என்பது யாவரும் அறிந்ததே..!
தந்தையின் பணியை, அவரது விடாமுயற்சி, ஊக்கம், பரோபகாரம் யாவற்றையும் மனதில்கொண்டு அவரது மூத்த புதல்வர் ஸ்ரீதர்சிங் இன்று முன்னெடுத்து வருகிறார். தந்தையின் பெயர் சொல்லும் புத்தக நிறுவனங்களை ஆலவிருட்சமாய் தளிர்க்கவைத்து, கொழும்பு, யாழ்ப்பாணம், லண்டன் நகரங்களில் ஸ்ரீதர்சிங் சகோதரர்கள் நற்பணிகளுக்கும் உதவிநின்று புகழீட்டி வருகிறார்கள்.
தோழர் பூபாலசிங்கம் நாமம் என்றும் நீடித்து நிலைக்கும்..!
0 comments :
Post a Comment