திமுக கூட்டணி சிக்கல் தீர்ந்தது-காங்கிரசுக்கு 63 தொகுதிகள்-பாமகவுக்கு 1 இடம் குறைப்பு!
சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த சிக்கல் இன்று தீர்ந்தது. காங்கிரஸ் கோரியபடி 63 இடங்களை ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதில் 61 இடங்களை திமுக ஒதுக்கும், மீதியுள்ள இரண்டு இடங்கள் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து பெறப்பட்டு காங்கிரசுக்கு வழங்கப்படுகிறது.
இதன்படி பாமகவுக்குத் தரப்பட்ட 31 தொகுதிகளி்ல் ஒரு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்குத் தரப்பட்ட 3 தொகுதிகளில் ஒன்றும் திரும்பப் பெறப்பட்டு காங்கிரசுக்கு தரப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
இன்று மத்திய நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜியை திமுக அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக அழகிரி, மாறன் இருவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தனர்.
நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இந்த இரு அமைச்சர்களும் சந்தித்தபோது திமுகவின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, தொகுதிப் பங்கீடு விவகாரம் குறித்து பேச மறுத்துவிட்டார்.
இந் நிலையில் இன்று பிரணாப் முகர்ஜி, அமைச்சர்கள் மாறன், அழகிரி பழனிமாணிக்கம் ஆகியோரை அழைத்து நீண்ட ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாதும் உடனிருந்தார்.
ஆரம்பத்தில் 90 தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸ் கடைசியாக 63 தொகுதிகளில் வந்து நின்றது. ஆனால், அந்த 63ம் தாங்கள் கேட்கும் தொகுதிகளாகவே இருக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டது. ஆனால் இதை திமுக ஏற்கவில்லை. காங்கிரஸும் தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை திமுக அறிவித்தது. இதை ஆரம்பத்தில் காங்கிரஸ் சீரியஸாக எடுத்துக் கொள்ள முயலவில்லை. மாறாக, வழக்கம் போல ஸ்டண்ட் அடிக்கிறது திமுக என்றுதான் நினைத்தது.
ஆனால் நேற்று காலை ராஜினாமா கடிதங்களைக் கொடுப்பதற்காக திமுக அமைச்சர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். அப்போதும் காங்கிரஸ் அசைந்து கொடுப்பதாக இல்லை. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு ராஜினாமா கடிதம் கொடுக்கப்படும், அதில் மாற்றம் இல்லை என்று திமுக அறிவித்தது.
இதையடுத்து பரபரப்பான காங்கிரஸ் வட்டாரம். இதையடுத்து பிரணாப் முகர்ஜி மூலம் கருணாநிதியுடன் 2 முறை பேசிய காங்கிரஸ் ஒரு நாள் அவகாசம் தருமாறு கோரியது. இதை முதல்வர் கருணாநிதி ஏற்று இன்று வரை ராஜினாமா முடிவை தள்ளிப் போட்டுள்ளார். இந் நிலையில் நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது திமுகவின் செயல்பாடு குறித்து சோனியா அதிருப்தி தெரிவித்ததோடு சந்திப்பு முடிந்துவிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் இருந்து விலகும் திமுக முடிவால் கோபமடைந்த சோனியா, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு நடத்த மறுத்துவிட்டார். இதனால் பிரச்சனைக்கு தீர்வு ஏதும் காணப்படவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கோரியபடி 60 தொகுதிகளைத் தரவும், காங்கிரஸ் கூடுதலாக கேட்கும் 3 தொகுதிகளை பாமகவிடமிருந்து பெறலாம் என்றும் திமுக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் 63 தொகுதிகள் எவை, எவை என்பதை திமுக தான் முடிவு செய்யும் என்று காங்கிரசிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் தரப்பு சம்மதிக்கவில்லை. தாங்கள் கோரும் 63 சீட்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது.
இதையடுத்து காங்கிரஸ் கோரும் தொகுதிகள் தான் வேண்டும் என்றால் 61 சீட்கள் தர முடியும் என திமுக தெரிவித்தது. அதேபோல ஆட்சியில் பங்கு என்பது குறித்தும் பரிசீலிக்கத் தயார், இருப்பினும் அதை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்தான் பரிசீலிக்க முடியும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டது.
இதை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. இதனால் மாலை வரை சுமுக தீர்வு ஏற்படவில்லை. இந் நிலையில் காங்கிரஸ், திமுக இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை குறித்து திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில்,தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரச்சனைகள் அப்படியே தொடர்கின்றன ('Status quo continues'). முதல்வர் கருணாநிதியுடன் சோனியா காந்தி பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை என்றார்.
சிக்கல் தீரும் என்ற கனிமொழி:
இந் நிலையில் டெல்லியில் திமுக எம்பி கனிமொழி கூறுகையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான சிக்கல் விரைவிலேயே தீரும். நாங்கள் நீண்ட காலமாக தோழமை கொண்டுள்ள கட்சிகள். இதனால் பிரச்சனை தீர்க்கப்படலாம். இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம். கூட்டணி உடையுமா என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றார்.
இந் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்ற எண்ணம் காங்கிரஸிடம் இல்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியது.
திமுகவை கண்டித்த சோனியா:
சோனியா காந்தியை நேற்று இரவு மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துப் பேசியபோது எடுத்த எடுப்பிலேயே, திமுகவின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் சோனியா. திமுகவிடமிருந்து இத்தகைய நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இது மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
தொடர்ந்து சோனியா கூறுகையில், இப்போது நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைளை முதலிலேயே செய்திருக்கலாம். அதைச் செய்திருந்தால் இவ்வளவு குழப்பம் வந்திருக்காது. ஆனால் அதை திமுக செய்யாமல், பொது ஊடகங்கள் வாயிலாக தனது கருத்தை தெரிவித்ததால்தான் பிரச்சினை ஏற்பட்டது. திமுகவின் அரசியல் ரீதியான கோரிக்கைளை ஒருபோதும் காங்கிரஸ் நிரகாரித்ததில்லை. எத்தகைய சிக்கலான கோரிக்கையாக இருந்தாலும் அதை நிறைவேற்றிக் கொடுத்துள்ளது காங்கிரஸ் என்பதை திமுக மறந்து விடக் கூடாது.
இப்போது எனக்கு தொகுதிப் பங்கீட்டைப் பற்றிக் கூட கவலையில்லை. ஆனால் கூட்டணி நாகரீகம் குறித்துதான் நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் சோனியா.
மேலும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போது திமுக நடந்துகொண்ட விதம் குறித்து தனது அதிருப்தியை சோனியா உறுதியான குரலில் தெரிவித்ததோடு தொகுதிப் பங்கீடு குறித்து எதையும் பேச மறுத்துவிட்டார்.
பிரணாபுடன் தமிழக காங். எம்பிக்கள் சந்தி்ப்பு:
சோனியாவுடனான சந்திப்புக்குப் பின்னர் திரும்பிய மு.க.அழகிரி, உடனடியாக முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு சந்திப்பு குறித்து விளக்கினார். இந் நிலையில் தான் இன்று பிரணாப் முகர்ஜி திமுக அமைச்சர்களை அழைத்து பேச்சு நடத்தினார்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களும் பிரணாப் முகர்ஜியை சந்தித்து திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. காங்கிரசுக்கு 63 இடங்களை ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது. அதே நேரத்தில் எந்தெந்தத் தொகுதிகள் என்பதை காங்கிரஸ் முடிவு செய்யுமா அல்லது திமுக முடிவு செய்யுமா என்பதை இரு கட்சிகளும் தெரிவிக்கவில்லை.
சிக்கல் தீர்ந்ததையடுத்து அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் குலாம் நபி ஆசாதுடன் சென்று சோனியா காந்தியை சந்தித்தனர்.
முன்னதாக காங்கிரசுக்கு 60 தருவது என திட்டமிடப்பட்டு, பாமகவுக்கு 31 இடங்கள், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 இடங்கள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 3 இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு 1 இடம் தரப்பட்ட நிலையில் திமுகவுக்கு 122 இடங்கள் தான் மிஞ்சியிருந்தன.
இந்நிலையில், காங்கிரசுக்கு 63 இடங்கள் தருவது என்ற முடிவால் திமுகவுக்கு 121 இடங்களே மிஞ்சியுள்ளன. பாமகவுக்கு 30 இடங்களும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 2 இடகங்ளும் தான் கிடைத்துள்ளன.
இதனால் திமுக, பாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு தலா ஒரு இடம் குறைந்துள்ளது. இதனால் திமுகவுக்கும் பாமக, முஸ்லீம் லீக் இடையே பிரச்சனை வரலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து மத்திய அரசிலிருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
திமுக 121 தொகுதிகளில் போட்டி-கருணாநிதி:
பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது குறித்து முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 30 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 தொகுதிகளிலும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment