வெள்ளைக்கொடி வழக்கின் திருப்புமுனை. 10 முக்கியஸ்தர்கள் பொன்சேகா சார்பாக சாட்சியம்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடி தாங்கிவந்த புலிகளின் முக்கியஸ்தர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய வன்னி களமுனையில் நின்ற முக்கிய தளபதிகளில் ஒருவாரான சவேந்திர டீ சில்வாவுக்கு உத்தவிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அவரின் இக்கருத்து சர்வதேச மற்றும் உள்ளுர் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் கருத்துக்கு எதிராக ஜெனரல் பொன்சேகா மீது வழங்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணைகளின்போது ஜெனரல் பொன்சேகா தரப்பு நியாயங்களை உறுதிசெய்யும் பொருட்டு 10 முக்கியஸ்தர்கள் சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாக இன்று மன்றில் பொன்சேகா தரப்பு சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ஜே.வி.பி. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க, பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே, கொழும்பு மேல்நீதிமன்ற பதிவாளர், தேசிய சுவடிக்கூடத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், தேசிய பத்திரிகை ஆணைக்குழுவின் செயலாளர், சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ரைசா விக்கிரமதுங்க ஆகியோர் பொன்சேகா தரப்பில் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக இன்னும் மூன்று சாட்சிகளின் விபரங்கள் பின்பு அறியத்தரப்படும் என்றும் சரத்பொன்சேகாவின் வழக்கறிஞர் நளின் லத்துவஹெட்டி நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து வழக்கு எதிர்வரும் முப்பதாம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு செயலர் உத்தரவிட்டதாக தெரிவித்திருந்த ஜெனரல் பொன்சேகா, அத்தகவலை தனக்கு களமுனை செய்திகளை நாட்டு மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த அரச தொ லைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரே தெரிவித்ததாக பின்னர் கூறியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட ஊடகவியலாளர் தற்போது நாட்டிலிருந்து வெளியேறி ஜரோப்பி நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக இலங்கைநெற் அறிகின்றது.
0 comments :
Post a Comment