Monday, February 7, 2011

சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடித்த உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் காந்தி.

உலக சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடித்துள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களில் முதல் 25 தலைவர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி, மொகலாயப் பேரரசர் அக்பர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் வெளியாகும் `டைம்' பத்திரிகை சார்பாக, உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களில் மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரொனால்டு ரீகனின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அந்த பட்டியலை `டைம்' வெளியிட்டது.

அதன்படி, முதல் 25 இடங்களை பெற்றுள்ளவர்களின் பட்டியலில் இந்தியா சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் மொகலாய பேரரசர் அக்பர் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. காந்தியை பற்றிய குறிப்பில், அவருடைய அகிம்சை வழி போராட்டத்தை பற்றி புகழ்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வக்கீலாக பணியாற்றியது. இந்தியாவில் நேருவுடன் இணைந்து சுதந்திரத்துக்கு போராடியது, உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட தகவல்களும் கூறப்பட்டுள்ளன.

இதுபோல, 16-ம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆட்சி செய்த மொகலாய பேரரசர் அக்பர் பற்றியும் புகழ்ந்து கூறப்பட்டிருக்கிறது. அதில், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் முஸ்லிம் பேரரசராக இருந்தபோதிலும் மதசார்பற்ற தன்மையை கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்து சென்றதாக அக்பர் குறித்து எழுதப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த 25 நிரந்தர தலைவர்கள் பட்டியலில் கிரேக்க பேரரசர் மாவீரன் அலெக்சாண்டர், சீன தலைவர் மவோ ஜெடாங், மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கான், ரஷிய தலைவர் லெனின், இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரெட் தாட்சர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் ஆபிரகாம் லிங்கன், ரீகன், சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, புரட்சியாளர் சே குவாரா மற்றும் திபெத் மதத் தலைவர் தலாய் லாமா, நெல்சன் மண்டேலா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com