லிபியாவில் ரத்தக்களறியை ஏற்படுத்த கடாபி திட்டம்.
தமது ஆதரவாளர்களுக்கு ஆயுத கிடங்கை திறந்துவிட்டு லிபியாவில் ரத்தக்களறியை ஏற்படுத்த அந்நாட்டு அதிபர் முகமது கடாபி திட்டமிட்டுள்ளார். லிபியாவில் அதிபர் 42 ஆண்டு கால ஆட்சியை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அடக்க கடாபி இராணுவத்தை ஏவி விட்டுள்ள போதிலும், பல இடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் வன்முறையை தடுத்து நிறுத்துமாறும், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது படையினரை ஏவிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடாபிக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தமது ஆதரவாளர்கள் மூலம் கொன்று குவிக்கும் பகீர் முடிவுக்கு கடாபி வந்துள்ளார். இதற்காக அவர் இராணுவத்தின் ஆயுத கிடங்குகளை தமது ஆதரவாளர்களுக்கு திறந்துவிட்டு, அவர்களிடம் ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு தமது ஆதரவாளர்களிடம் ஆயுதங்களை வழங்கி அவர்களை, போராட்டக்காரர்கள் கடந்து வரும் முக்கிய சோதனை சாவடிகளில் நிறுத்தவும், வீதிகளில் ரோந்து வரச் செய்யவும் கேட்டுக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
டிரிபோலி கோட்டையில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், தேசத்தை காக்க தயாராகுமாறும், உரிய நேரத்தில் ஆயுதக்கிடங்குகள் திறந்துவிடப்படும் என்றும் கூறினார். கடாபியின் இந்த முடிவால் லிபியாவில் ரத்தக்களறி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
லிபியா ரத்தக்களறி: உலக நாடுகள் அணி திரள ஒபாமா வேண்டுகோள்
லிபியாவில் ஏற்பட்டுள்ள ரத்தக்களறிக்கு எதிராக உலக நாடுகள் அணி திரள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை நசுக்க அந்நாட்டு படையினர் மேற்கொண்டு நடவடிக்கைகளினால் வீதியெங்கும் பிணக்குவியல்கள் காணப்படுகின்றன.
படையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் பலப்பிரயோகத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர். இதனிடையே அதிபர் கடாபி தாம் பதவி விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, போராட்டக்காரர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் லிபியா கலவரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதன் முதலாக வாய் திறந்துள்ள ஒபாமா, அந்நாட்டில் நிகழும் ரத்தக்களறியை நிறுத்த உலக நாடுகள் அணி திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
லிபியாவுக்கு எதிராக மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்பது மற்றும் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment