தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - ஆன்மா லயிக்கும் இடத்தில் காமம் லயிக்கலாமா?
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல்யமான முருகன் ஆலயம் அது. இரவுவேளை என்றால் பொழுதுகளைக் கழிப்பதற்காக இளைஞர்கள், வயோதிபர்கள் என அவ்வாலய முன்றலில் கூடுவது வழக்கம். நீண்டகாலப் போரியல் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இயல்புச்சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதையடுத்து மக்களின் பொழுதுகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் தற்போது அவ் ஆலயத்தின் முன் அரட்டையடித்து தமது பொழுதைக் கழிக்கவருபவர்கள் குறைவு. இருப்பினும் ஆலயத்திற்கு அருகிலுள்ள சிலர் தமது வயதையொத்தவர்களுடன் அரட்டையடித்து தமது மனப்பாரங்களை குறைப்பதற்கு வருவதை வாடிக்கையாக்கிக் கொள்கின்றனர். அப்படி அரட்டையடிக்கும் வாடிக்கையாளர்களில் நானும் ஒருவன்.
அன்றும் எனது வயதையொத்த சில நண்பர்களுடன் கதையளந்துகொண்டிருந்தேன். இரவு 8.00மணியிருக்கும். எமது கதையாடல்களுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தத்தம் வீடுகளுக்கு கிளம்பத் தயாரானோம். எம்மைப் போலவே அங்கு நின்ற அனேகர் தமது பிரச்சினைகளையெல்லாம் கொட்டித்தீர்த்து மனச்சுமைகளை இறக்கிவைத்து விட்டோம் என்ற களிப்பில் அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஆள் நடமாட்டம் அவ் ஆலயச்சூழலில் சற்றே குறைந்திருந்தது. இரவு வேளையென்றால் மின்சார சபையும் தனது திருவிளையாடலைக் காட்டுவது வழமை. மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம். இருள் அப்பியவேளை, திடீரென ஒளியைப் பாய்ச்சியபடி வந்த மோட்டார் சைக்கிள் ஆலயத்தின் அருகிலுள்ள மதிலோரம் நின்றது. இருள் கவிந்திருந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை அடையாளம் காணமுடியவில்லை. எமது கண்ணுக்கெட்டிய வரை இரு உருவங்கள் எமது புலக்காட்சிக்கு தென்பட்டன. தற்போதைய நிலையில் இரவு நேர இராணுவச் சோதனைகள் அதிகம் என்பதால் இராணுவத்தினர் தான் வந்திருக்க வேண்டும் என கருதிய மனதில் உள்ளூரப் பயம் தொற்றிக்கொண்டது.
இருந்தும், உடனே கிளம்புவது உசிதமல்ல எனக் கருதி சிறிது நேரம் கழித்துச் செல்லலாம் என முடிவெடுத்திருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுடைய சலனம் தெரியவில்லை. நேரம் செல்லச்செல்ல ஒரு பக்கம் பயம். இன்னொரு பக்கம் வந்தவர்கள் யார் என அறியத்துடிக்கும் மனம். இரண்டும் கெட்டான் நிலையில் எங்கள் நிலை. என்னுடன் கூட வந்த நண்பர்கள் இருவர் துணிவை வரவழைத்துக் கொண்டு அப்பகுதிக்குச்சென்று பார்க்க அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இளைஞன் ஒருவனும், யுவதி ஒருத்தியும் அருவருப்பூட்டும் அளவிற்கு விரசமான முறையில் நடந்துகொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை தமக்கு முன்னால் மறைப்புப் போல் நிறுத்திவிட்டு ஆலய மதில் ஓரமாக இருவரும் அருவருக்கத் தக்க முறையில் நடந்து கொண்டிருந்தனர். தம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் நெருக்கமாக அமர்ந்திருந்தபடி தமது காம லீலைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். இப்படியான சம்பவங்கள் அந்த ஆலயத்தில் அவ்வப்போது இரவு வேளைகளில் இடம்பெற்றுவருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
ஆலயம் என்பது ஆன்மா லயிக்கும் இடம். காமத்தில் லயிக்கும் இடமல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புனிதமான சூழலை பாழாக்கும் கைங்கரியங்களில் காதலர்கள் என்ற போர்வையில் அசிங்கத்தனமாக நடக்கமுற்படுபவர்கள் குறித்து பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
காதலர்கள் என்ற தோரணையில் வரும் இளம் காதல் ஜோடிகள், தமது காதல் லீலைகளை அரங்கேற்றுவதற்கு கோயில்முதலான புனித இடங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. இதனால் வழிபட வரும் பக்தர்களின் மனங்கள் சிதறுப்பட வழியேற்படுத்தப்படுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரை சில கோயில்கள் அமைதியான இயற்கையுடன் ஒன்றிய புறவயச் சூழலில் அமைந்திருக்கின்றன. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் காதலர்கள் அப்புனிதமான இடத்தைப் பாழாக்குகின்றனர்.
அண்மையில் கூட ஆலயம் ஒன்றிலிருந்து இளம் காதல் ஜோடி சல்லாபித்துக் கொண்டிருந்த வேளை அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு வாக்கு வாதப்பட்டு இறுதியில் காதலி கேவிக் கேவி அழுததாகவும், இதனால் வழிபட வந்த பக்தர்கள் கலவரமடைந்து குறித்த இளம் காதல் ஜோடியை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.
இப்படியான பல்வேறு அசிங்கமான நடத்தைக்கோலங்கள் குடாநாட்டு ஆலயங்களின் புனிதத்தன்மையை கெடுத்துக் கொண்டிருப்பதானது சமூகப் பிரக்ஞையுடையவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகின்றது. காதல் என்ற சொல் அன்பைக் குறித்து நிற்கின்றது. காதல் என்ற புனிதம் இல்லை எனில் மனித மனங்கள் என்றைக்கோ விலங்குகளின் தன்மையை ஏற்றிருக்கும். ஆதனால் காதல் என்பது குறுகிய வட்டத்துக்குள் தவறாகச் சிக்கிக் கொள்ளும் போதுதான் அதன் புனிதத் தன்மை கெட்டுப் போவதற்கு வழிசமைக்கின்றது.
சமூகத்தில் மிக உயர்வாகக் கருதப்படுவதும், மனிதர்களிடையே உட்பிணைப்பை ஏற்படுத்துவதும் மனித நேயத்தை மேன்மையுறச் செய்வதும் காதல் என்ற நேசிப்புப் பண்பாகும். இக் காதல் உணர்வானது சாதி, மதம், மொழி, இன பேதம் எல்லாவற்றையும் கடந்து மனித நேயப்பண்பை வளர்க்கும் மாபெரும் சக்தி. இதனால்தான் பாரதி கூட "காதல் செய்வீர் உலகத்தீரே...' என முழங்கினான் போலும். காதல் வாலிப வயதில்வரும் உள்ளார்ந்த உணர்வு என்ற எல்லைக்கப்பால், சகல ஜீவராசிகளுக்குமான இடைத்தொடர்புத் தனங்களுக்கு நீண்டுசெல்லும் போது தான் காதலின் பலம் பெருகி மானிடநேசிப்பு விரிவடைய வழிவகுக்கின்றது.
எனவே தான், இப்புனிதமான காதலைச் சிறுமைப்படுத்தி பல வாலிப வயதினர் பருவ உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தான் தோன்றித்தனமாக நடக்கமுற்படுதல் பல்வேறு சமூக, கலாசாரப் பிறழ்வுக்கும் வழிவகுக்கின்றது. இன்றைய சூழலில் குடா நாட்டை உலுப்பிக்கொண்டிருக்கும் கலாசாரச் சீரழிவுகள் பற்றி பல தரப்பினரையும் பிரஸ்தாபிக்கப்பட்டு வரும் இவ்வேளை, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை என்பதே யதார்த்தம்.
தற்போது குடாநாட்டின் அபிவிருத்தி குறித்து பல தரப்பினரது சிந்திக்கப்பட்டு வரும்வேளை, எம்மினத்தின் கலாசாரச்சீரழிவு குறித்தும் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். கல்வி அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி பற்றிய சித்தாந்தம் செயலுருப் பெறவைக்க வேண்டும் எனத் துடிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் தமிழினத்தின் ஆணி வேரான பண்பாட்டுக் கருவூலங்கள் சிதைவடைந்து செல்கின்றமை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை என்பதே சோகம் தரும் விடயமாகும். ஏனெனில், ஒரு இனத்தின் தோற்றம், வளர்ச்சி நிலை,பெறுகை அதன் அருமை பெருமை எல்லாமே அவ்வினத்தின் பண்பாடுகளில் தான் தங்கியிருக்கின்றதென்றால் மிகையில்லை. ஒரு இனத்தின் அழிவென்பது அவ்வினத்தின் மொழியிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் ஏற்படும் சிதைவுகளைப் பொறுத்தே அமைகின்றது.
இன்னமும் எமது இனத்தின் பெருமை குறித்தெல்லாம் பீற்றிக் கொண்டிருப்பதில் பயனில்லை. எம்மினத்தினிடையே ஆழ வேர்விட்டுள்ள சிறுமைத் தனங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். எம்மினத்தின் பண்பாட்டு விழுமியங்களை மேற்கத்தைய நாட்டவர்கள் கூட வியந்து போற்றிவரும் நிலையில் நாமே எமது கலாசாரங்களைப் புறக்கணித்து மேலை நாட்டு கலாசாரங்களை அப்படியே உள்வாங்கி வாழத் தலைப்படுவது அபத்தமானது. இதனால், எம்மினத்தின் கலாசார அøடயாளங்கள் அழிந்துபோவதைத் தடுக்கமுடியாது போய்விடும் என்பதே யதார்த்தம்.
யாழ்மண்ணுக்காக உதிஷ்டிரன்
0 comments :
Post a Comment