எம்.பி ஸ்வர்ணமாலியின் கணவர் பிணையில் செல்ல அனுமதி.
நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியின் கணவர் மகேஷ் சமிந்த வலவேகம இன்று நுகேகொடை நீதவான் அனுர குமார ஹேரத்தினால் 2500 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'பபா' என அழைக்கப்படும் நடிகை ஸ்வர்ணமாலி முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நடிகையை தாக்கியதாக கூறப்படும் அவரின் கணவர் மகேஷ் சமிந்த வலவேகம பொலிஸில் தேடப்பட்ட நிலையில் சரணடைந்து பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நுகோகொடை நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது மகேஷ் சமிந்தவுக்கு பிணை வழங்குமாறு அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரினர். இப்பிரச்சினை கணவன் மனைவிக்கிடையிலானது எனவும் இவர்களின் குழந்தைத்தனமான நடத்தை காரணமானது எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, இரு தரப்பினரும் இப்பிரச்சினையை தமக்கிடையில் தீர்த்துக்கொள்வதற்கு முயற்சிப்பதாக மீரிஹான பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் எதிர்காலத்தில் இவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்குமாறும் பொலிஸார் கோரினர்.
அதையடுத்து நடிகைக்கு தீங்கு எதுவும் இழைக்கக்கூடாது என அவரின் கணவரை நீதிவான் எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை மே 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment