Wednesday, February 2, 2011

சரத் பொன்சேகாவுக்குச் சுடு நீர் வழங்குவதற்குக் கூட ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலை.

சளி மற்றும் இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவிற்கு அருந்த சுடுநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை மீண்டும் சேவையில் இணைத்து அவர்களுக்கு ஊதியம் வழங்கியதாக சரத் பொன்சேகா மற்றும் அவருடைய செயலாளராகச் செயற்பட்ட சேனக டி சில்வா ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா மற்றும் சேனக டி சில்வா ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சரத் பொன்சேகா சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி முதலில் கருத்துக்களை முன்வைத்தார்.

சந்தேகநபரான சரத் பொன்சேகா கடந்த இரு வாரங்களாக சளி மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சுடுநீர் வழங்குமாறு சிறைச்சாலை வைத்தியர் கூறியுள்ளபோதும் அதற்கான சலுகைகள் இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலை வைத்தியர் கூறியிருப்பின் ஏன் இன்னும் சரத் பொன்சேகாவிற்கு சுடுநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர சிறைச்சாலை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலை அதிகாரி பதிலளித்தார்.

எனினும் சுடுநீர் வசதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் பின்னர் இரண்டாவது சந்தேகநபரான சேனக டி சில்வா சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி அவருக்கு பிணை வழங்குமாறு கோரினார்.

இந்த பிணை கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அரச வழக்கறிஞர், பிணை வழங்கினால் அதனை பயன்படுத்தி சந்தேகநபர் நீதிமன்றை அவமதித்து வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார்.

எனினும் அந்தக் கருத்துக்களை மறுத்த சந்தேகநபர் சார்பான சட்டத்தரணி பிணை வழங்குமாறு கோரினார்.

இருந்தும் பிணை வழங்க மறுத்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சேனக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் மே மாதம் 3ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com