ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்.
டுனிசியா, எகிப்து, ஏமன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஈரானிலும் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கலகத் தடுப்பு போலிசார், கூட்டத்தினர் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். போலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அந்த வழியாகச் சென்ற ஒருவர் கொல்லப்பட்டதாக ஈரானிய செய்தி நிறுவனம் கூறியது. அந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தலைநகர் டெஹ்ரானில் பல இடங்களில் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியதைத் தொடர்ந்து கலவரங்கள் மூண்டதாக செய்தி நிறுவனத் தகவல் கூறியது.
டெஹ்ரான் சதுக்கத்தில் எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் ஒன்றுகூடி ஈரானிய அதிபர் அகமது நிஜாத்திற்கு எதிராக கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் பலரை போலிசார் கைது செய்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன், ஈரானிய ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஈரானிய மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று திருவாட்டி ஹில்லரி கூறியதாக பிபிசி தகவல் கூறியது. ஈரானின் அரசியல் முறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று ஹில்லரி கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment