இந்திய மீனவர்கள் விடுதலை : இலங்கை மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்களின் சொத்துக்களை திருடியதாகவும் அவர்களின் வழங்களுக்கு ஊறு விளைவித்ததாகவும் யாழ் மீனவர்களினால் கரைக்கு இழுத்துவரப்பட்டு கடந்த 16ம் திகதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 136 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சியில் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களை பெப்ரவரி 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றமும் வலிகாமாம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 28 மீனவர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தன.
இம்மீனவர்களின் இலங்கையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான பலத்த கோஷங்கள் இந்தியாவில் எழுந்திருந்ததுடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் கடும்தொனியில் இலங்கையை விமர்சித்திருந்தார். அதேநேரம் வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஸை தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா மீனவர்கள் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என கோரியதையடுத்து அதற்கு ஜி.எல் ஒத்துக்கொண்டதாக இந்திய பத்தி ரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தவின் பேரில் நீதிமன்றில் திடீர் மனுவென்றை சமர்பித்த பொலிஸார் குறிப்பிட்ட மீனவர்களை விடுதலை செய்வதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்ததை அடுத்து இரு நீதிமன்ற ங்களும் மீனவர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்துள்ளது. இம்மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் உதவியுடன் தமது படகுகளுடன் தமிழகத்திற்கு திரும்பவுள்ளனர்.
ஆனால் மீனவர்களை வழியனுப்பி வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பேசுகையில் உங்களை விடுதலை செய்வதற்காக தான் கனிமொழியின் வேண்டுதலுக்கு இண ங்க ஜனாதிபதியுடன் பேசியதாக தெரிவித்து அவர்களுக்கு உடுபுடவைகளும் வழங்கியுள்ளார்.
இதேநேரம் யாழ். குருநகரைச் சேரந்த மீனவர்கள் நால்வர் இன்று அதிகாலை இந்திய மீனவர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கங்களில் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.
'குருநகரைச் சேர்ந்த பிரான்ஸிஸ் (வயது 60), பாஸீஸியஸ் (49), ராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்தனர். இவர்களின் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் இந்திய எல்லைக்கு நுழைந்தபோது அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் இந்நால்வரையும் மக்கிப் பிடித்து கரையோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் நால்வரும் தற்சமயம் மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவ சங்கத்தின் தலைவர் எனக்கு அறிவித்துள்ளார். இவர்களை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்துதள்ளார்.
மேலும் இலங்கை மீனவர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கைதானது மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதென மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தங்களுடைய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் வளங்களை அழித்த இந்திய மீனவர்களை எந்தவொரு நியதியும் இல்லாமல் விடுதலை செய்தமை குறித்து தாம் அதிருப்தி அடைவதாக வட மாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.நவரட்ணம் தெரிவித்துள்ளார்:
'இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த மேற்படி மீனவர்கள் உச்சகட்டமான அழிவு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் எவ்வித நியாயமுமற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்டமையானது வட மாகாண கடற்றொழிலாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment