எகிப்து அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம்
எகிப்து அதிபர் முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் கெய்ரோவில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, கெய்ரோவில் கிளர்ச்சியாளர்கள் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர். எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்(82) பதவி விலகக் கோரி, கடந்த 17 நாட்களாக லட்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடினர். நேற்று 10 லட்சம் பேர் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் தாரிர் சதுக்கத்தில் நடக்கும் என, ஆர்ப்பாட்டக் குழுக்கள் அறிவித்தன. அதில், பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து, சாரி சாரியாக மக்கள் சதுக்கத்தை நோக்கி வரத் துவங்கினர். இதனால், நேற்று முன்தினமே சதுக்கம் நிரம்பி வழிந்தது. ராணுவம் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. நிலைமை மோசமாவதை உணர்ந்த ராணுவம், அரசு "டிவி'யில் அதிபர் முபாரக் தோன்றி, தனது முடிவை அறிவிப்பார்" என்று தெரிவித்தது.
நேற்று முன்தினம் 'டிவி'யில் தோன்றிய முபாரக், "செப்டம்பரில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அது வரை நான் அதிபர் பதவியை விட்டு விலகப் போவதில்லை. எனினும், எனது சில அதிகாரங்களை துணை அதிபர் ஒமர் சுலைமானிடம் அளிக்க உள்ளேன்" என்றார். நாடு முழுவதிலும் அதிபரின் உரை எதிர்பாராத பெரும் மோசமான விளைவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள், அதிபர் மாளிகை, அரசு 'டிவி' அலுவலகம் இரண்டையும் முற்றுகையிட்டனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இரு முறை எகிப்து ராணுவ தலைமை கவுன்சில் அவசரமாக கூடி நிலைமை குறித்து விவாதித்தது. ஏற்கனவே ஒரு தளபதி உள்ளிட்ட 16 ராணுவ அதிகாரிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததால், இந்த கூட்டத்தில், அதிபர் முபாரக்குக்கு எதிரான முடிவு எடுக்கப்படலாம் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், ராணுவ தலைமை கவுன்சில் கூட்டத்தில் அதிபர் முபாரக்குக்கு ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டது.
2-வது கூட்டம் முடிவடைந்தபின் வெளியிடப்பட்ட அறிக்கையில், முபாரக் ஏற்கனவே கூறியதுபோல் செப்டம்பர் மாதம் நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும், அவசர நிலை சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல், வீடுகளுக்கு திரும்பி வேலையை கவனியுங்கள் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தாலும், போராட்டத்தை கைவிடவில்லை. இறுதிவரை மேலும் தீவிரமாக போராடுவது என்று மக்கள் முடிவு செய்தனர். நேற்று தங்கள் ஆர்ப்பாட்டத்தை தாரிர் சதுக்கத்திற்கு வெளியே நாடு முழுவதும் பரப்பினர். கெய்ரோ நகர், அலெக்சாண்டிரியா, சூயஸ், மன்சூரா, டாம்ன்ஹர், டன்டா, மன்ஹல்லா, அசுயிட், சொகாக், பனிசாபி, போர்ட் சயீத், டமியெட்டா, கின் மற்றும் ஆரிஷ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதிபர் முபாரக் நாட்டை விட்டு ஓடி விட்டதாக அல் அரபியா செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர் சினாய் தீபகற்பத்தில் உள்ள ஷரம் எல் ஷேக்கில் இருப்பதாக சொன்னது. ஆனால், முபாரக் பதவி விலகி விட்டதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. "அதிபர் முபாரக் பதவி விலகுகிறார். தனது அதிகாரத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்" என, துணை அதிபர் ஒமர் சுலைமான் அரசு தொலைக்காட்சி மூலம் அறிவித்தார். இதையடுத்து, தாரிக் சதுக்கத்தில் கூடியிருந்தவர்கள், ஆடிப்பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "எகிப்து சுதந்திர எகிப்தாகி விட்டது" என, கோஷங்கள் எழுப்பினர்.
0 comments :
Post a Comment