சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு போட லிபியா பைலட்கள் மறுப்பு.
எகிப்தில் பற்றிய புரட்சி தீ, பல நாடுகளுக்கு பரவிக் கொண்டிருக்கிறது. லிபியாவில் அதிபர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த 9 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ராணுவம் மூலம் அடக்கி வருகிறது லிபியா. மிஸ்ரடா நகரில் போராட்டத்தில் குதித்துள்ள எதிர்க்கட்சியினர் மீது விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சில இடங்களில் குண்டுகளும் வீசப்பட்டன. ராணுவத் தாக்குதலில் 1000க்கும் அதிகமானோர் பலியானதாக கூறப்படுகிறது. இதனால் லிபியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. லிபியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் வெளியேற தொடங்கியுள்ளனர். தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்கு பல நாடுகளும் கப்பல்களை அனுப்பியுள்ளது.
மக்கள் மீது நடத்தப்படும் ராணுவ தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஓட ஓட விரட்டும் வரை ஓயப் போவதில்லை என சவால் விட்டார் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம். இந்நிலையில் பெங்காசி நகரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது குண்டு வீச விமானப்படையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இரண்டு சுகாய் போர் விமானங்கள் குண்டு போட புறப்பட்டது.
சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு போட விரும்பாத விமானப்படை பைலட்கள் இருவரும், விமானத்தை பாலைவன பகுதிக்கு திருப்பினர். பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து குதித்து, விமானத்தை விபத்துக்குள்ளாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் ஆங்காங்கே சில நகரங்களை கைப்பற்றி தனி நிர்வாகத்தை அமைத்து வருகின்றனர். 'புது லிபியா' என அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'லிபியாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மக்கள் அனைவரும் தங்கள் பணிக்கு திரும்புங்கள்' என அரசு சார்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது.
0 comments :
Post a Comment