Friday, February 25, 2011

அமெரிக்க தூதரக அதிகாரியை விடுவித்தால் புரட்சி வெடிக்கும் - இம்ரான் கான் எச்சரிக்கை

"பாகிஸ்தானியர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை விடுவித்தால், எகிப்து நாட்டில் வெடித்தது போல புரட்சி வெடிக்கும்'' என்று கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல் தலைவராக மாறிய இம்ரான் கான் எச்சரித்து இருக்கிறார்.

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியவர் ரேமண்ட் டேவிஸ். இவர் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி காரில் சென்றபோது தன்னிடம் கொள்ளையடிக்க முயன்றதாக கூறி 2 பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்றார்.

பலியான அந்த 2 பேரும் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஏஜெண்டுகள் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து டேவிஸ் கைது செய்யப்பட்டார். டேவிஸ் அமெரிக்க உளவுத்துறையின் ஏஜெண்டு என்று கூறப்படுகிறது. கைதான டேவிஸ் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவரை விடுதலை செய்யவேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் இந்த எதிர்ப்பில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன.

டேவிஸ் விடுதலை செய்யப்பட்டால் அது எகிப்து நாட்டில் ஏற்பட்டது போன்ற புரட்சியை உருவாக்கும் என்று இம்ரான் கான் கூறி இருக்கிறார். இவர் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், அரசியல் கட்சி தொடங்கினார். அவர் கூறியதாவது:-

"டேவிஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அசாதாரண நிலை ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து டேவிஸ் விடுதலை செய்யப்பட்டால், பாகிஸ்தானில் புரட்சி வெடிக்கும். எகிப்து நாட்டில் வெடித்தது போன்ற புரட்சி பாகிஸ்தானிலும் வெடிக்கும்.

பாகிஸ்தானில் புரட்சி வெடிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகி உள்ளது. புரட்சிக்கு ஆயத்த நிலை ஏற்பட்டு உள்ளது. எகிப்திலும், துனிஷியாவிலும், மற்ற முஸ்லிம் நாடுகளிலும் என்ன என்ன பிரசினைகளை அந்த நாட்டு மக்கள் எதிர்கொண்டு இருக்கிறார்களோ அவை போன்ற பிரசினைகளை பாகிஸ்தான் இளைஞர்களும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

வரலாறு காணாத அளவுக்கு ஊழல் தலை விரித்தாடுகிறது. மோசமான அரசாங்கம் நாட்டை நிர்வாகம் செய்து வருகிறது. இவை எல்லாமே மக்களின் இதயத்துக்குள் கொதித்துக் கொண்டிருக்கிறது. இதனால் புரட்சி வெடிக்கும்.''

இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com