Tuesday, February 22, 2011

கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன் சென்னையில் கைது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இன்று காலை விமானம் மூலம் கொழும்பு சென்ற அவரை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தமிழ் தேச கூட்டமைப்பினர் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர். இந்நிலையில் திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய போலீசார், அவர் இலங்கைக்குள் நுழைய தடை விதித்திருப்பதாகக் கூறி, அடுத்த விமானத்திலேயே சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

இலங்கை அரசின் கெடுபிடி காரணமாக திருமாவளவன் இன்று காலை 5.45 மணிக்கு சென்னை வந்தார். இதையடுத்து இலங்கை அரசை கண்டித்து ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகத்தை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோசம் எழுப்பினார்கள்.

பின்னர் இலங்கை கொடி மற்றும் அதிபர் ராஜபக்சேயின் உருவ படங்களை தீ வைத்து எரித்தனர். பின்னர் பார்வதி அம்மாள் உருவ படத்தை ஏந்தியபடி டி.டி.கே.சாலையில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ. மாநில பொருளாளர் முகமது யூசுப், பொது செயலாளர் கலைக்கோட்டுதயம், வன்னியரசு, வீரமுத்து, இளஞ்செழியன், சைதை பாலாஜி, கபிலன், இரா.செல்வம், பொன்னிவளவன், கமலக் கண்ணன் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com