டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்
''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை திருப்பி அனுப்பியதற்கு பதிலடியாக தேடப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய சர்வதேச காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது.
திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர். எந்த நாட்டிற்கும் எப்போது வேண்டுமானாலும் செல்ல இந்த பாஸ்போர்ட் அனுமதிக்கும். ஆனால் அவரை இலங்கை திருப்பி அனுப்பியது இந்திய அரசை அவமதித்த செயலாகும்.
சென்னை நீதிமன்றத்தால் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு தாராளமாக வந்துசெல்கிறார். ஆனால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை இலங்கை திருப்பி அனுப்புகிறது. இது பெரும் அவமானம்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேடப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த சர்வதேச காவல்துறை மூலம் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment