சுவிஸ் வங்கி: இரகசிய காப்பு விதிகளில் தளர்வு?
கறுப்புப் பண முதலைகளின் கிடங்காகக் கருதப்படும் சுவிஸ் வங்கி தனது வாடிக்கையாளர், கணக்குறுப்பினர் குறித்த தகவல்களை யாருக்கும் அளிப்பதில்லை என்பதை கொள்கை முடிவாக வைத்துள்ளது அறிந்ததே. முன்னதாக, சுவிஸ் அரசு சில விதிமுறைகளை தளர்த்திஇருந்தது. அதன்படி, வரி ஏய்ப்பு செய்தவரின் பெயர் மற்றும் முகவரி, அவர் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள வங்கியின் பெயர் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை சுவிஸ் அரசாங்கத்திடம் தெரிவித்தால்தான், சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அந்த கறுப்பு பண முதலையின் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்ற விதிமுறை உள்ளது
இப்போது, கறுப்பு பண முதலைகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள, வேறு சில அடையாள முறைகளையும் அனுமதிக்கலாம் என்று விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. வேறு அடையாள முறைகள் என்னென்ன என்பது பற்றி சுவிஸ் அரசு தெரிவிக்கவில்லை
சுவிஸ் வங்கிக்கணக்குகளில் வெளிநாட்டு அரசுகள் புகுந்து தங்களுக்கு வேண்டிய தகவல்களைத் திரட்டுவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் சுவிஸ் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஆயினும், வங்கிக்கணக்கு தொடர்பான சில அடையாளங்கள் ஏற்கப்படும் என்று சுவிஸ் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், இந்த விதிமுறை தளர்வுக்காக, வெளிநாட்டு அரசுகளுடன் சுவிஸ் அரசு செய்து கொண்ட இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்த விதிமுறைகள் திருத்தப்பட வேண்டியுள்ளது. மேலும், சுவிஸ் நாட்டு பாராளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.
அதன்பிறகு, மேற்கண்ட விதிமுறை தளர்வு நடைமுறைக்கு வரும் என்றும் சுவிஸ் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment