Monday, February 14, 2011

முஷாரஃபை ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் பாகிஸ்தான் கோரிக்கை

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலையுண்டது தொடர்பான விசாரணை பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் அமைந்துள்ள இராவல் பிண்டியில் உள்ள தீவிரவாததத் தடுப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் பெயரும் அண்மையில் இடைக்கால குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெனாசிர் கொலை செய்யப்பட்ட போது, முஷாரஃப் தான் அதிபராக இருந்தார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அவர் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தநிலையில், தீவிரவாதத் தடுப்பு நீதி மன்றத்தில் விசாரணைக்காக முஷரப் தொடர்ந்து வருகை தரவில்லை . எனவே, அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என அரசின் சிறப்பு வழக்கறிஞ்ர் குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து முஷரப்பை கைது செய்ய கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது முஷரப் லண்டனில் தங்கியுள்ளார். மேலும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தை இதுவரை இங்கிலாந்துடன் பாகிஸ்தான் செய்து கொள்ளவில்லை. எனவே, அவரை பாகிஸ்தான் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரிய மல்ல. எனவே, பெனாசிர் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக முஷரப்பை தங்களிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பாகிஸ்தான் உள்துறைமந்திரி ரஹ்மான் மாலிக் தலைமையில் நடந்தது. இந்த தகவல் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாததால் முஷரஃப்பை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு மன்றம் முன்பு முன்னிலைப் படுத்த முடியாது என்றும் தன்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் முஷரப் மறுத்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞ்ர் முகமது அலி சயீஃப் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com