Wednesday, February 9, 2011

அரசியல் மோசடி. லெனின் பெனடிற்

கடந்த 30 வருடங்களில் இலங்கையின் தமிழ் பேசும்மக்களின் அரசியல் வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் போராட்டமானது சாத்வீக முறையிலும் பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டு இறுதியாக அது பாசிசப் புலிகளின் தலைமையின் கீழ் மிகக் கொடூரமான பயங்கரவாதப் போராட்டமாக உருமாற்றம் பெற்றது. இதன் பின்னணியில் இதை உருவாக்கிய மகத்தான பங்களிப்பின் உரிமைக்காரார்கள் கூட்டணியினர் ஆவர். தமிழ் மக்களுக்கு இவர்கள் ஆற்றிய மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம் இதுவாகும்- தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சூனியமாக்கிய கைங்கரியம் இதுவாகும்.

தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்குக்களமிறக்கி எமது ஒட்டுமொத்த இளம் சந்ததியினரையும் பலிகடாவாக்கிய சாதனை இதுவாகும். இந்த வரலாற்றை மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவது எமது கடமை என்று கருதுகின்றோம். இந்த மூன்று தசாப்த வெற்றி தோல்வி காட்டிக்கொடுப்பு களுத்தறுப்புக்கள் அத்தனையையும் என்றென்றென்றைக்கும் பசுமரத்தாணிபோல பதிய வைக்காவிடில், மீண்டும்
புதிதாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் மனங்களில் நித்தியம் அதிரவைக்காவிடில் பழைய தவறுகளுக்கு அவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

1977 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழ்தேசியப் பிரிவினைவாத வெறியைத்தூண்டிவிட்டு அதன் மூலம் குளிர்காய்ந்த கூட்டணிப் பெரும்தகைகளின் குலவிளக்குகள் மட்டும் நாட்டைவிட்டு வெளியேறி பட்டப் படிப்புகளுக்கும் படாடோபமான வாழ்கைக்குள் உட்பட்டதும் பழைய கதை. தங்களுடைய குடும்பங்களை மட்டும் மிகச் சாமர்த்தியமாகவும் பத்திரமாகவும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு ஊரவன் பிள்ளைகளுக்கு மட்டும் துவக்கைக் கையில் கொடுத்து போராட்டக்களமிறக்கிய கனவான்கள் இந்தக் கூட்டணிப் பெரும் தகைகள் என்பதுங்கூட எல்லோருக்கும் தெரிந்த பழங்கதைதான். ஆனால் அதே பழங்கதையை மீண்டும் புதுப்பிக்கப் புறப்பட்டுள்ள இந்தக் கூட்டணிப் பெருந்தகைகளின் கைச்சிதமான சூழ்ச்சிதான் இப்போதய புதுக்கதை.

தாங்கள் எய்திய அம்பு தங்களையே பதம் பார்த்ததும் தான் வழர்த்தகடாவே தன்மார்பில் பாய்ந்ததும் பழங்கதையென்றாலும் தமிழ் மக்களுக்கு த.வி.கூட்டணியால் அல்லது த.தே.கூட்டமைப்பால் இழைக்கப்பட்டுவரும் துரோகங்கள் மட்டும் முடிந்தவிட்ட பழங்கதைகள் அல்ல. மீண்டும் புதிய சூழலுக்கேற்ப தொடங்கப்பட்ட மற்றுமொரு புதுக்கதையாகும். அதனால் வரும் அழிவும் அவமானமும் உத்தரவாதப்பட்ட ஒன்றாகும். தங்களால் உருவாக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் தங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும் என்றெண்ணி இறுமாப்புடன் இருந்த கூட்டணித்தலைமை ஆயுதப்போராட்டம் தங்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதை அறிந்து அதிர்ந்துபோனாலும் தமது சர்வதேச எஜமானர்களின் சாணக்கியம் துணை நிற்கவே மிகச்சாதுரியமாக தம்மைத் தமிழ்தேசியத்தின் தலைமையாக மீண்டும் காட்டிக்கொண்டதோடு தாம் ஒருமிதவாதத் தலைமையென்றும் பாராளுமன்ற ஜனனாயகவாதிகளென்றும் தமிழ்மக்களையும் உலகையும் ஏமாற்றி வருகிறது.

வட்டுக்கோட்டையில் ஆடத்தொடங்கிய நாடகத்தை மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் பல்வேறு பாத்திரமேற்று பல ஆயிரம் அரசியல்மேடைகளில் நடித்த கூட்டணி மற்றும்
கூட்டமைப்பு நடிகர் திலகங்கள் இப்போது புதிதாக ஏற்றிருக்கும் பாத்திரம் 'அரசுடன் ஒத்துழைப்பு' என்ற வேடம். இந்தப் புதிய பாத்திரம் தற்செயலாக மேடையேற்றப்பட்ட நாடகமல்ல. திரைமறைவுகளில் பல்வேறு மாதங்களாக ஒத்திகை பார்க்கப்பட்டு திரைக்கதை வசனம் பாடல் காட்சியமைப்பென்று பல்வேறு வடிவங்களில் ஒப்பனை பார்க்கப்பட்டு நடிகர்கள் துணைநடிகர்கள் தேர்வுகளும் நடாத்தப்பட்டு இறுதியாக அரங்கேறியுள்ள ஏமாற்று நாடகமே இப்போது வெளிவந்திருக்கிறது.

இந்த நாடகத்தின் நடிகர்கள் கூட்டணியினர் என்றாலும் கூட இதன் இயக்குனர் மேதகு ஜனாதபதி மஹிந்தா ராஜபக்ஸ்ச அவர்களே. மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள திரைக் கதையுடன் அமைக்கப்பட்ட காட்சியமைப்பு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருகு;கிறது. இதன் உதவி இயக்குனராகப் பொறுப்பேற்றிருப்பவர் சர்வதேச பயங்கரவாதியும் புலிகளின் ஆயுதக் கடத்தல் பேர்வழியுமான மேதகு குமரன் பத்மநாபன் என்றழைகப்படும் கே.பி. இந்த சூழ்ச்சி நாடகத்தின் ஒலி ஒளி அமைப்பை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் புலிப்பினாமிகளான
வெளிநாட்டுத் தமிழர் அமைப்புகளே. இதில் மிகவும் துயரமான சம்பவம் என்னவென்றால் எந்தத்தமிழ் சமூகத்தை ஏமாற்றுவதற்காக இந்த நாடகம் அரங்கேற்றப் பட்டதோ அதே தமிழ் சமூகம் இந்த நாடகத்தை ரசித்துக்கொண்டிருக்க புலம்பெயர் புத்திஜீவித் தமிழ் சமூகம் ஏதும் அறியாத அப்பாவிகளாக அதை ஆதரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நாடகத்தின் பல்வேறு சம்பவங்கள் பல சுவையான காட்சிகளாக அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் கூட இதன் முடிவு தமிழ் மக்களின் ஏற்கனவே சூனியமாகிவிட்டு எதிர்காலத்தையும் மீண்டும் சூனியத்துள் தள்ளுவதுடன் மற்றுமொரு முள்ளிவாய்க்காலுக்கு இட்டுச் செல்லவே திட்டுமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றும் அல்லது ஒத்துழைக்கும் அனைத்துத் தமிழ் கட்சிகளுமே துரோகிகள் என்றழைத்த புலிப் பினாமிகள் அல்லது புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கை அரசை ஆதரிக்கும் தமிழர் கூட்டமைப்பை மட்டும் ஏன் எதிர்க்கவில்லை? பிரபாகரனைத் தேசியத்தலைவரென்று வாய்கிழியக் கத்திக் கொடிபிடித்த புலம்பெயர் தமிழர் கூட்டம் இவர்களது தேசியத் தலைவiரைக் காட்டிக்கொடுத்து கைதியாக்கி வைத்ததுமல்லாமல் உச்சந்தலையில் கோடாலியால் கொத்துவாங்க வைத்து முழுத்தமிழினத்துக்குமே நிரந்தர அவமானத்தைத் தேடித்தந்த கேபியை ஏன் எதிர்க்கவில்லை. இலங்கை அரசோடு பேரம்பேசவும் ஜனபதியையும் கேபியையும் சந்திக்க ஓடோடிச் சென்ற தமிழ் ஈழ மறவர்களை ஏன் எதிர்க்கவில்லை?

இவர்களை மட்டுமல்ல இன்று இலங்கையில் முதலீடு செய்வதற்கு முண்டியடித்தோடும் நபர்களையும் போர்முடிந்த கையோடு இலங்கை அரசோடு சமரசம் கதைத்துக் கொண்டிருக்கும் புலித்துரோகப் பினாமிகளையும் ஏன் புலம்பெயர் தமிழர் கூட்டம் எதிர்ககவில்லை. எதிர்ப்பதற்குத் தெரியவில்லையா? அல்லது எதிர்ப்பதற்குத் திராணி இல்லையா?

எவ்வாறாயினும் இந்த நாடகத்தின் ஒரு பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். ஜனாதிபதியை சந்திப்பதும் வேறு ஒருவரின்றி இவர்கள் இருவர்மட்டும் பேரம் பேசுவதுமாகும். இதுவரையில் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பால் இழைக்கப்பட்ட துரோகங்களில் அதிஉயர் சிறப்புவாய்ந்த துரோகம் இதுவாகும். தமிழ்மக்களின் பிரச்சனையொன்றும் சம்பந்தி சம்பந்தனும் ஜனாதிபதியும் தனிமையில் சந்தித்துத் தீர்மானிக்க இது இவர்களது குடும்பப் பிரச்சனையல்ல. இது இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான தமிழ்மக்களின் எதிர்கால வாழ்கை வரலாறு பற்றிய பிரச்சனை. வருங்காலத்தமிழ் சந்ததியின் அரசியல் உரிமை பற்றிய பிரச்சனை. 70 வருடமாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கும் அரசியல் தீர்வுப் பிரச்சனை. இலங்கைப் பாராளமன்ற நேரத்தின் அரைவாசிப் பங்கை விழுங்கிய பிரச்சனை. 2 லட்சம் இலங்கையர்களை சட்டவிரோதக் கொலைகுப்பலிகொடுத்த பிரச்சனை. 1977 இல் இருந்து அவசரகாலச் சட்ட ஆட்சியை அமுல் நடத்திய பிரச்சனை. தமிழர் பிரதேசத்தை கல்லுக்குமேல் கல்லில்லாமல் ஆக்கிய பிரச்சனை. ஈழவளநாட்டை மீளாக்கடனுள் அமிழ்த்திய பிரச்சனை. அனாதைகளை நிரந்தர அங்கவீனர்களை விதவைகளை உருவாக்கிக்குவித்த பிரச்சனை. இனிமேல் அங்கவீனர்களாகவும் விதவைகளாகவும் போகும் அபாயத்தில் வாழும் இலங்கையர்கள் அதைத் தடுக்க வழிவிட வேண்டிய பிரச்சனை.

இதனை அனைத்துத் தமிழ் கட்சிகளுடன் சேர்ர்ந்தே பகிரங்கமாக கதைத்து விவாதிக்கப்பட வேண்டும். இதில் ஒரு கட்சியை மட்டும் அழைத்து ரகசியமாக ஜனாதிபதி கதைப்பதன் சூழ்ச்சி
மற்றவர்களை விசனமடையச் செய்து, தீராத முரண்பாட்டை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியேயாகும். அதிலும் விசேஷடமாக பிரிவினைவாதத்தை தூண்டியவர்களும்
ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் புலிகளை எக்காலத்திலும் ஆதரித்தவர்களுமான கூட்டமைப்புடன் பேசுவது மீண்டும் பிரிவினைவாதத்திற்கு உயிர்கொடுத்து ஒட்டுமொத்தத்
தமிழினத்தையும் அழிப்பதற்கும் இன்னுமொரு 10 லட்சம் தமிழரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்குமான மோசடித் திட்டமேயாகும்.

அடுத்ததாக ஆயுத வியாபாரியான கேபியை அரசியலுக்குக் கொண்டுவந்து அரியணையில் இருத்தும் நடவடிக்கையானது தமிழ் குழுக்களிடையே மோதலை ஏற்படுத்தி வெகுவிரைவில்
கிடைக்க வேண்டிய தீர்வை தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் செய்யவும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உரிமை இழந்த தமிழினமாக வாழச் செய்வதே ஜனாதிபதியின் அரசியல் மோசடி நடவடிக்கையாகும். 2011.02.09

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com