அரசின் சர்வாதிகாரப்போக்கை உணர்த்தும் தாக்குதல் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க.
இராணுவ நீதிமன்றின் ஆலோசனையின்பேரில் மஹிந்த ராஜபக்சவினால் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்து ஐக்கிய தேசிய முன்னணியினால் நடாத்தப்பட்ட ஆர்பாட்ட பேரணி மீது குண்டர்கள் தாக்குதல் நாடாத்தியுள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக இலங்கைநெற் இற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில், சுதந்திரதினத்தை முன்னிட்டு சுமார் 1500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கையில், நாட்டினை பயங்கர வாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜெனரல் பொன்சேகாவும் விடுவிக்கப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாம் முன்னெடுத்த அகிம்சா போராட்டம் அரசின் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.
இத்தாக்குதல் இடம்பெறும்போது பொலிஸார்கைகட்டி பார்வையாளர்களாக நின்றனர் என தெரிவித்த அவர், நாட்டின் சுதந்திர தினமான இன்று மக்கள் தமது சுதந்திரமான கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடமளியாது, அவர்களின் கருத்துக்களை குண்டர்கள் கொண்டு அடக்க முயல்வது அரசின் ஜனநாயக மீறல்களை கோடிட்டு காட்டுகின்றது என தெரிவித்தார்.
தாக்குதலை நாடாத்திய குண்டர்கள் அரசின் முக்கியஸ்தர் ஒருவர் வீட்டிலிருந்தே இத்தாக்குதலுக்கு புறப்பட்டதாக தெரியவருகின்றது. பேரணியில் கலந்து கொண்டிருந்தோர் மீது இவர்கள் கற்களைக் கொண்டு தாக்கியள்ளனர். தாக்குதலில் பலர் காயமடைந்தும் வாகனங்களுக்கு சேதம் எற்பட்டும் உள்ளது.
குறிப்பிட்ட பேரணி கொழும்பு, மெகஸின் சிறைச்சாலைப் பகுதியிலிருந்து புஞ்சி பொரல்லை நோக்கி வந்து கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment