மாஸ்கோ தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள்.
ரஷ்யாவில் மாஸ்கோ விமான நிலையத்தில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. ரஷ்யாவில் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் இரு தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று ரஷ்ய பாதுகாப்புப் படையினர் கடந்த டிசம்பர் மாதம் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் மற்றொரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் ஆயத்த நிலையில் இருக்கக்கூடும் என்ற அச்சம் அங்கு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மாஸ்கோவில் தளம் அமைத்து செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் மாஸ்கோ விமான நிலைய தாக்குதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் அவர்களை ஈடுபடுத்துவதாகவும் ரஷ்ய உளவுத் துறை தகவல்கள் கூறின.
மாஸ்கோ விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பெண் என்று ரஷ்ய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் அரசுக்கு எதிராக காக்கஸ் மாநில தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் “கறுப்பின விதவைகள்” என்ற பெயரில் பெண் தற்கொலைப் படை அமைப்பு ஒன்று உள்ளது.
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட அந்தப் பெண் இந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் கறுப்புநிற உடை அணிந்திருந்ததாக தாக்குதலை நேரில் பார்த்த ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை குண்டு வெடித்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர், 132 பேர் காயமடைந்தனர்.
0 comments :
Post a Comment