போர் மூண்டால் இனப் பேரழிவு ஏற்படும்: வட கொரியா
சோல், தென் கொரியாவுடன் நல்லுறவை வரவேற்ற வட கொரியா, இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் அது அணுவாயுதப் போருக்கு வழி வகுக்கும் என்றும் அதன் விளைவு இனப் பேரழிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. வட கொரியா புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் அணு வாயுதமற்ற கொரிய தீபகற்பம் வேண்டும் என்று அறைகூவல் விடுத்து வந்துள்ளது. இருப்பினும், 2006ம் ஆண்டுக்கு பின்னர் அது இரண்டு முறை அணுவாயுதப் பரிசோதனை நடத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில் தான் அந்நாடு தனது ராணுவம் காலதாமதமின்றி, இரக்கமற்ற முறையில் துடைத்தொழிக்கும் நடவடிக்கையை எடுக்கத் தான் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
வட கொரியாவின் மூன்று செய்தித் தாட்களில் கூட்டாக வெளியிடப்பட்ட தலையங்கத்தில், இரு கொரியாக் களுக்கும் இடையிலான நெருக்கடியை உடனடியாகத் தணிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அத்துடன் கொரிய நாட்டு உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. “கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம் நீக்கப்பட்டு அமைதி காக்கப்பட வேண்டும்,” என்று அந்தத் தலையங்கச் செய்தி கூறியது.
வட கொரியாவின் இதுபோன்ற செய்தித் தகவல்களை கூர்ந்து கவனிக்கும் தென் கொரிய அரசு, இது பற்றி உடனடியாக கருத்துக் கூற எதுவுமில்லை என்றது.
0 comments :
Post a Comment