உரும்பிராய் பகுதியில் கிணறொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது.
யாழ்ப்பாணம் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் பாழடைந்த கிணறொன்றில் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட வன்னியிலிருந்து சென்றிருந்த 5 பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் அமர்தராஜா என்பவரின் சடலமே இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த கிணறு இன்று துப்பரவாக்கப்பட்ட போது கிணற்றின் அடியில் காணப்பட்ட அவரது கைத்தொலைபேசி மற்றும் கடைசியாக அணிந்திருந்த சாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் அடையாளம் காணப்படவில்லை. அவரது 5 குழந்தைகளும் கூட அடையாளம் காண முடியாதவாறு சடலம் உருக்குலைந்து காணப்பட்டது.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் நீதவான் பிறப்பித்த உத்தரவின் பிரகாரம் இன்று காலை கோப்பாய் பொலிஸார் அந்தக் கிணற்றை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையிலேயே கிணற்றின் அடியில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் அவரது சாரம் என்பவற்றினைக் கொண்டு அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வன்னி யுத்தத்தில் சிக்குண்டு முகாமிலிருந்த அவர் அண்மையிலேயே முகாமிலிருந்து
விடுவிக்கப்பட்டிருந்தார். இவரின் மனைவி எறிகணை வீச்சில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment