இயற்கையின் சீற்றத்திற்கு உள்ளாகியுள்ள நம் உறவுகளிற்கு உதவிடுவோம்!
கடந்த சில வாரங்களாக மட்டு, அம்பாறை உட்பட நாட்டின் பல பாகங்களில் இயற்கையின் சீற்றத்தினால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வீடு வாசல்களை இழந்து நிற்கதியாகிய நிலையில் பாடசாலைகளிலும், ஆலயங்களிலும், பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
இவ் மக்களுக்கான நிவாரண உதவிகள் பூரணமாக கிடைக்காத நிலையில், சுகாதார சீர்கேடுகள் உட்பட பல சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளிற்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் கோரத்தினாலும் மற்றும் சுனாமியின் தாக்கத்தின் அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து வரும் கிழக்கிலங்கை மக்கள் மற்றுமொரு இயற்கையின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் அவ் மக்களிற்கு புலம்பெயர் மக்களும் உதவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மழை மற்றும் வெள்ளபெருக்கினால் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை மக்களிற்கான நிவாரண பணிகளில் அரசு மற்றும் தமிழ், முஸ்லீம் கட்சிகள், அமைப்புகள் என பலவும் உதவி வருகின்றன.
இந்த மக்களின் அவலத்தை போக்கிட புலம்பெயர் தமிழ் மக்களும் தம்மாலான உதவிகளை வழங்கி எம் மக்களின் வாழ்வு வளம்பட உதவிடுவீர். கடந்த சுனாமி பேரழிவின்போது பல அமைப்புக்கள் புலம் பெயர் மக்களிடம் பாரிய நிதியினை சேகரித்தபோதும், அந்த நிதிகள் எவையும் பூரணமாக மக்களை சென்றடையவில்லை.
ஆகவே கடந்த காலங்களைபோல் உதவிகளை வழங்கி ஏமாந்து போகாமல், உண்மையாகவே யார் உதவி புரிகின்றனர், யாரிடம் உதவி வழங்கினால் மக்களை சென்றடையும் என்பதை இனம்கண்டு உங்களது உதவிகளை வழங்கிடுவீர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் அவலத்தை கூறி நிதியினை கொள்ளையடிப்பதற்கும் சிலர் முன்வருவார்கள.; ஆகவே, அவர்களை இனம் கண்டு நீங்கள் வழங்கும் உதவி மக்களை சென்றடைகின்றதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்லது அந்த உதவி வழங்கிய நிறுவனங்கள், அமைப்புக்களிடம் உதவி வழங்கியமைக்கான ஆதாரங்களை கோருங்கள்.
உதவி புரியும் மக்களாகிய உங்களிற்கு கேள்வி கேட்கும் தார்மக உரிமையுண்டு. உங்களது
கேள்விகள்தான் வழங்கப்படும் உதவிகள் மக்களை சென்றடைய வாய்ப்பாக அமையும். ஏமாற்று பேர்வழிகள் பலர் நம் சமுதாயத்தின் மத்தியில் உள்ளனர். அதற்காக உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறையுள்ள அமைப்புகள் இல்லாமலும் இல்லை.
அவ்வாறான அமைப்புகளை இனம் கண்டு அவர்கள் ஊடாக உங்கள் உதவிகளை பாதிக்கப்பட்ட நம் மக்களிற்காக வழங்கிடுவீர்.
அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே!
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (சர்வதேச செயலகம்)
0 comments :
Post a Comment